சேவைகளை ஒருங்கிணைக்க கிராம செயலகங்கள் உருவாக்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை:

நாடுமுழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பஞ்சாயத்து ராஜ் தினம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. காஷ்மீரில் நடந்த பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதன் முதலாக கலந்துகொண்டார்.

மாநிலங்களில் நடந்த பஞ்சாயத்து ராஜ் நிகழ்ச்சிகளில் கிராம மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். தமிழ்நாட்டிலும் பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது.

ஆண்டுதோறும் ஏப்ரல் 24-ந்தேதி பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இன்றைய தினம் கிராமசபை கூட்டங்கள் நடத்த ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

அதில் ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்பதற்கு ஏற்ப கிராம சபையில் முக்கிய அடிப்படை பிரச்சினைகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையொட்டி ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்கோடு கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று பங்கேற்றார்.

இந்த கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றிரவே அவர் ஸ்ரீபெரும்புதூர் சென்று தங்கினார். இன்று காலை 10.50 மணி அளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கோடு கிராமத்திற்கு சென்றார்.

அங்கு அவரை கிராம மக்கள் உற்சாகத்துடன் கைகூப்பி வரவேற்றனர். பின்னர் அவர்களுடன் அமர்ந்து கிராமசபை கூட்டத்தை நடத்தினார். அப்போது அந்த கிராமத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும் இந்த கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு என்னென்ன தேவை என்பது குறித்து எடுத்து சொன்னார்கள்.

அவர்கள் சொன்ன குறைகள் மற்றும் கருத்துக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனமாக கேட்டுக்கொண்டார். அப்போது அரசின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை விவரித்து பதில் கூறினார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

செங்காடு ஊர் பொதுமக்களிடத்தில் குறைகளை கேட்டு, அதை சரிசெய்ய வேண்டும். நிவர்த்தி செய்திட வேண்டும் என்கிற உணர்வோடு இந்த கிராமசபை கூட்டத்திலேயே கலந்து கொண்டிருக்கிற உங்களுக்கு எனது வாழ்த்துக்களை, பாராட்டுக்களை நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த கிராமசபை கூட்டத்திலே இன்று தேசிய ஊராட்சிகள் நாள். அப்படிப்பட்ட நாளிலே செங்காடு கிராமத்தில் உங்களோடு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

எண்ணற்ற கோவில்கள், குடவறைகள், சின்னங்கள், புராதன கட்டிடங்கள், கோபுரங்கள் ஆகியவற்றின் மூலமாக ஓர் உன்னத இடத்தை பெற்றிருக்கக்கூடிய ஊர் தான், இந்த மாவட்டம் தான் காஞ்சிபுரம் மாவட்டம் என்பதை அனைவரும் நன்றாக அறிவோம்.

நமக்கெல்லாம் ஆசானாக விளங்கிக்கொண்டிருக்கிற நம்முடைய பேரறிஞர் அண்ணா பிறந்த ஊர் காஞ்சிபுரம். எனவே அவர் வழி வந்திருக்கக்கூடிய நாம் இன்றைக்கு செங்காடு ஊராட்சி மக்களை சந்திக்கும் வாய்ப்பை பெற்றுள்ளோம்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகள், பாரம்பரியமான பழம்பெரும் வரலாறை கொண்டது. இந்த மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டு குறிப்புகள் இதற்கு சான்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

ஊராட்சி அமைப்புகளை வலுப்படுத்தவும், வலிமைபடுத்தவும் அதிகார பரவலை உறுதிபடுத்தவும், அரசியல் அமைப்பு சட்டத்திருத்தம் ஊராட்சி அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் முதன் முதலாக நடைமுறைக்கு வந்த நாள் ஏப்ரல் 24. அந்த நாள் தேசிய ஊராட்சிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அதற்கு தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும் நாம் பூர்த்தி செய்தாக வேண்டும். ஊராட்சிகளில் எல்லா அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தன்னிறைவு அடையக்கூடிய வகையில் தலைவர் கலைஞர் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார் என்பது நாடறிந்த உண்மை.

அவர் கொண்டுவந்த திட்டம் தான் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம். அந்த திட்டத்தை புதுப்பொலிவோடு நாம் நிறைவேற்றத்தொடங்கி இருக்கிறோம்.

அவர் கொண்டு வந்திருக்கக்கூடிய திட்டங்களில் முக்கியமானவற்றை நாம் சொல்ல வேண்டுமானால் சமூக நீதியோடு இன, மத ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் ஜாதி, மத பேதங்களை கடந்து அனைவரும் ஒற்றுமையோடு வாழ வேண்டும். ஒருமித்த கருத்தோடு வாழ வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் தந்தை பெரியார் பெயரில் உருவாகிய பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் என்பது உங்களுக்கு தெரியும்.

அதேபோல் மக்கள் பணிகளை அடையாளம் கண்டு அரசின் உதவியோடு தங்களுக்கு தேவையான பணிகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ள உருவாக்கப்பட்ட திட்டம் தான் நமக்கு நாமே திட்டம்.

ஊராட்சி அனைத்திலும் முழுமையாக அறிவு சுடரை ஏற்ற வேண்டும் என்பதற்காக அண்ணா பெயரில் நூல்கள் ஆரம்பிக்கப்பட்டது. கலைஞர் காட்டிய வழியில் செயல்படக்கூடிய நமது அரசு உள்ளாட்சிகள் மேல் கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை இன்று செயல்படுத்திக்கொண்டிருக்கிறது.

மாவட்ட ஆட்சியரகங்களில் உள்ளது போல ஊராட்சி அளவிலும் அனைத்து துறைகளின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து அவர்களது சேவையை கிராம மக்களை சென்றடைய கிராம செயலகம் உருவாக்கப்பட இருக்கிறது.

மக்களின் பங்கேற்பை அதிகப்படுத்தி முழு மக்கள் அதிகாரத்தை ஏற்படுத்தி ஆண்டுக்கு முன்பெல்லாம் 4 முறை கிராமசபை கூட்டம் அதுவும் முறையாக கூட்டியது இல்லை. நேற்று முன்தினம் சட்டசபையில் நான் அறிவித்தேன். இனிமேல் கிராமசபை கூட்டங்கள் ஆண்டுக்கு 6 முறை கூட்டப்பட வேண்டும் என்ற அறிவிப்பை 110 விதியின் கீழ் அறிவித்தேன்.

நோயற்ற ஊராட்சி இலக்கை எட்டுவதற்கு மக்களை தேடி மருத்துவம் மொத்தம் உள்ள ஊராட்சி பிரதிநிதிகளில் மகளிருக்கு 56 சதவீதம் இடஒதுக்கீடு அனைத்து ஊராட்சி பிரதிநிதிகளுக்கு 5 முதல் 10 மடங்கு வரை அமர்வு படி உயர்த்தி அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் நவம்பர் அன்று உள்ளாட்சி நாளாக கடைபிடித்து சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்குவது போன்ற திட்டங்களும் நிறைவேற்றப்பட இருக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 7.46 லட்சம் மகளிர் சுயஉதவி குழுக்களில் உறுப்பினராக உள்ள 1.7 கோடி மகளிர் நிதி சுதந்திரத்தையும், நிதி மேலாண்மையையும் உறுதி செய்து நம்முடைய அரசு முனைப்போடு செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைய கிராம ஊராட்சிகள் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு திராவிட மாடல் ஆட்சி என்பதை உலகுக்கு நாம் உணர்த்திட போகிறோம். நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சிகளை எட்டுவதன் மூலமாக இந்த கிராம ஊராட்சிகள் தேசிய அளவிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் மற்றும் அதிகாரிகள் முன்னின்று விரிவாக செய்திருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.