கோடிக்கணக்கான ரூபாய் கஞ்சா கடத்திய வழக்கில் கைதாகியுள்ள நாகையைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியுடன் சொகுசு ஓட்டலில் காவல் ஆய்வாளர் பிரியாணி சாப்பிடும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன் ஆந்திராவிலிருந்து நாகை வழியாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சாவை நாகை காவல் நிலைய எஸ்.ஐ பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக பிரபல கஞ்சா வியாபாரி சிலம்பரசன் அவரது கூட்டாளிகள் 4 பேர் உட்பட 5 பேரை கைது செய்தனர். கைதானவர்களின் செல்போனை ஆய்வு செய்தபோது, தற்போதைய காவல் ஆய்வாளர் பெரியசாமியோடு அவர்கள் அடிக்கடி பேசியது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் கஞ்சா வியாபாரி சிலம்பரசனுடன் ஆய்வாளர் பெரியசாமி சொகுசு விடுதி ஒன்றில் அமர்ந்து பிரியாணி சாப்பிடுவது போன்ற புகைப்படமும் கிடைத்துள்ளது. இந்த புகைப்படம் ஓராண்டுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும் அதில் இருப்பவர்களை அப்போது யாரென்றே தெரியாது என்றும் பெரியசாமி விளக்கமளித்துள்ளார்.
ஆனால் புகைப்படத்தை உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மாவட்ட எஸ்.பி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.