ஸ்ரீநகர்: ஜனநாயகமாகட்டும் அல்லது வளர்ச்சியாகட்டும் ஜம்மு-காஷ்மீர் கடந்த 2,3 ஆண்டுகளில் புதிய அடையாளத்தைப் பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு இன்று ( ஏப்ரல் 24 ) பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு-காஷ்மீர் வருகை தந்தார். ஜம்மு- காஷ்மீருக்கு சட்டப்பிரிவு 370ன் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் என்பதால் இது பலதரப்பிலும் கவனம் பெற்றது.
இந்நிலையில் ஜம்மு வந்த பிரதமர் மோடி ரூ.3,500 கோடி செலவில், பாணிஹால் – குவாசிகுண்ட் சாலையில் கட்டப்பட்டுள்ள சுரங்கப் பாதையை பிரதமர் திறந்து வைத்தார். இந்த சுரங்கப்பாதை ஜம்முவிற்கும் காஷ்மீருக்கும் இடையே அனைத்து பருவ நிலையிலும் போக்குவரத்து தொடர்பை உறுதிப்படுத்தும். இதுமட்டுமல்லாமல் ரூ. 20,000 கோடி மதிப்பிலான பலவகை வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த ஆண்டு தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை ஜம்மு-காஷ்மீரில் கொண்டாடுவது மிகவும் சிறப்பானது. ஜனநாயகம் சமூகத்தின் அடிமட்டம் வரை வேர்விட்டுள்ளது பெருமைக்குரியது. நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் ஜம்மு-காஷ்மீரில் தனியார் முதலீடு வெறும் 17,000 கோடி என்றளவிலேயே இருந்தது. இப்போது பாஜக ஆட்சியில் இது ரூ.38,000 கோடியாக அதிகரித்துள்ளது.
புதிய முதலீடுகளால் ஜம்மு காஷ்மீரில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் இனி அவர்கள் பெற்றோர், தாத்தா பாட்டி அனுபவித்த இன்னல்களை சந்திக்க மாட்டார்கள்.
சம்பா மாவட்டம் பாலியில் 500 கிலோ வாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரியமின் சக்தி நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது. இதனால் பாலி பஞ்சாயத்து இந்தியாவில் கார்பன் நியூட்ரல் அந்தஸ்து பெறும் முதல் பஞ்சாயத்தாக உருவாகிறது. இதுதான் ஒன்றுபட்ட முயற்சியின் விளைவு.
‘ஒரே பாரதம் வளமான பாரதம்’ என்பதைப் பற்றி பேசும்போதெல்லாம், போக்குவரத்துக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இன்று ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியிலும், ஜனநாயகத்திலும் புதிய எல்லைகளை தொட்டுள்ளது. புதிய அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. பாணிஹால் – குவாசிகுண்ட் புதிய சுரங்கப்பாதை ஜம்முவிற்கும் காஷ்மீருக்கும் இடையேயான இடையே அனைத்து பருவ நிலையிலும் தொடர்பை ஏற்படுத்த உதவும்” என்றார்.
முன்னதாக, பிரதமரின் விழா நடைபெறும் இடத்துக்கு அருகே நேற்று முன்தினம் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பிரதமர் பங்கேற்கும் விழாவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விழாவில், 30,000 உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட ஒரு லட்சம்பேர் விழாவில் பங்கேற்றிருந்தனர்.