புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரின் சம்பா பகுதியில் இன்று நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார். அப்போது பல்வேறு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டம், பாலி கிராமத்தில் இன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த விழாவில் 30,000-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
இதனிடையே பிரதமரின் விழா நடைபெறும் இடத்துக்கு அருகே நேற்று முன்தினம் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
இதுகுறித்து காஷ்மீர் காவல் துறை தலைவர் தில்பாக் சிங் கூறும்போது, ‘‘ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தற்கொலைப்படை பிரிவை சேர்ந்த 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளோம். பிரதமரின் விழாவை சீர்குலைக்க இவர்கள் சதித் திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்துள்ளது. மிகப்பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பிரதமர் பங்கேற்கும் விழாவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் குல்தீப் சிங் நேற்று பாலிக்கு சென்று விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். என்கவுன்ட் டர் நடைபெற்ற இடத்தையும் அவர் பார்வையிட்டார்.
தீவிரவாத அச்சுறுத்தல் இருந்தாலும் பிரதமரின் விழாவை திட்டமிட்டபடி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11.30 மணிக்கு விழாவில் பிரதமர் உரையாற்ற உள்ளார். அப்போது ‘‘அம்ரித் சரோவர்’’ திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார். இதன்படி நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தலா 75 நீர்நிலைகள் புனரமைக்கப்பட உள்ளன. காஷ்மீரில் ரூ.20,000 கோடிக்கு பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், போலீஸார் கூறியதாவது:
பிரதமரின் விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே விழா அரங்கில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. 30,000 உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட ஒரு லட்சம்பேர் விழாவில் பங்கேற்க உள்ளனர். அனைவரும் பரிசோதனைக்கு பிறகே அரங்கில் அனுமதிக்கப்படுவார்கள்.
பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடம், அவரை விழாமேடைக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட ஒத்திகைகளை நடத்தியுள்ளோம். சம்பா சுற்றுவட்டார பகுதிகளில் வாகன சோதனை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.