ஜம்மு காஷ்மீரில் சூரிய சக்தி மின் நிலையம் உட்பட ரூ.20 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்கள்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

பாலி (சம்பா): சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக ஜம்மு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சூரிய சக்தி மின் நிலையம் உட்பட ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றார். கடந்த 2019-ம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக ஜம்மு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜம்முவில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள பாலி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பாலி கிராமத்தில் மத்திய அரசின் ‘கிராம உர்ஜா ஸ்வராஜ்’ திட்டத்தின் கீழ் ரூ.2.75 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் நிலையத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த மின்நிலையம் 3 வாரங்களில் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ரூ.3,100 கோடி செலவில் கட்டப்பட்ட பனிஹால் காசிகுண்ட் சாலை சுரங்கப் பாதையையும் பிரதமர் திறந்து வைத்தார். ரூ.7,500 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டமைக்கப்பட உள்ள டெல்லி –அமிர்தசரஸ் – கத்ரா விரைவு சாலையின் மூன்று சாலை தொகுப்புகளுக்கும், கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றில் சுமார் ரூ.5,300 கோடி செலவில் கட்டப்படும் 850 மெகாவாட் திறன் கொண்ட ரத்லே மற்றும் க்வார் நீர்மின் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். நீர்நிலைகளை புதுப்பிக்க, அம்ரித்சரோவர் என்ற புதிய முயற்சியையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இதன்மூலம் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகள் புதுப்பிக்கப்படும்.

புதிய திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் பேசியதாவது:”இந்த முறை பஞ்சாயத்து ராஜ் தினம், ஜம்மு காஷ்மீரில் கொண்டாடப்படுகிறது. இது மிகப் பெரிய மாற்றத்தை குறிக்கிறது. ஜனநாயகம் அடித்தட்டு மக்களைச் சென்றடைந்துள்ளது பெருமையான விஷயம். அதனால் தான், இங்கிருந்து நாட்டில் உள்ள பஞ்சாயத்துகளுடன் கலந்துரையாடுகிறேன். இந்த யூனியன் பிரதேசம் புதிய வளர்ச்சி கதையை எழுதப் போகிறது.

கடந்த 70 ஆண்டுகளில் இங்கு தனியார் முதலீடு ரூ.17 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது அது ரூ.38 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என நான் கூறும்போது, நமது கவனம் இணைப்பிலும், இடைவெளியை போக்குவதிலும் இருக்கிறது. எல்லா பருவநிலையிலும், ஜம்மு காஷ்மீருக்கு இணைப்பை ஏற்படுத்தி கொடுப்பதுதான் எங்கள் நோக்கம்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள இளைஞர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகள் பல கஷ்டங்களுடன் வாழ்ந்தனர். உங்கள் வாழ்க்கையில் அதுபோன்ற கஷ்டங்கள் ஏற்படாது. அதை உங்களுக்கு நாங்கள் நிரூபிப்போம்” இவ்வாறு பிரதமர் கூறினார்.

பாலி கிராமத்தில் 6,408 சதுரமீட்டர் இடத்தில் 1,500 சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட்டு சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், உள்ளூர் மின் தொகுப்பு மூலம் பாலி கிராமத்துக்கு விநியோகிக்கப்படும். இந்த கிராமத்தின் தினசரி மின் தேவை 2 ஆயிரம் யூனிட்டுகள். இந்த கிராமத்தில் 450 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு சூரிய சக்தி மின் அடுப்புகள் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமரின் வருகையால், பாலி கிராம மக்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். இதுகுறித்து அந்தகிராமத்தைச் சேர்ந்த குர்தீப் சிங் கூறும்போது, “இந்த நாள் குறிப்பிடத்தக்க நாள்.பிரதமர் மோடியின் ஆசியால், எங்கள் கிராமம் சூரிய மின் சக்தி கிராமமாகமாறியுள்ளது. இந்த திட்டத்துக்கு எங்கள் கிராமத்தை தேர்ந்தெடுத்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்றார்.

அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்த பாலி கிராமத்தில் தற்போது மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு மின்சாரபேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய குளம் மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது சூரிய சக்தி மின் திட்டம்அமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

-பிடிஐ

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.