மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சாமுன்டா என்ற நகை வியாபார நிறுவனத்தின் நிகர வருவாய் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.23 லட்சத்தில் இருந்து ரூ.1,764 கோடியாக உயர்ந்திருந்ததை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் கவனித்தனர். அந்த நிறுவனத்தின் சமீபத்திய பணபரிவர்த்தனை ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான மும்பையில் உள்ள 3 இடங்களில் சோதனை நடத்தினர்.
அதில் கல்பாதேவி பகுதியில் உள்ள நிறுவனத்தின் 35 சதுர அடி அலுவலகத்திலும் நடந்தது. சல்லடை போட்டு தேடியும் அந்த சிறிய அலுவலகத்தில் அதிகாரிகளுக்கு சந்தேகத்திற்கு இடமாக எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், அறையின் ஓரத்தில் சந்தேகத்துக்கு இடமாக பதிக்கப்பட்டு இருந்த டைல்ஸ் கல்லை அதிகாரிகள் அகற்றினர். அதற்குள் இருந்த சிறிய பாதாள அறைக்குள் மூட்டை, மூட்டையாக பணம் இருந்ததைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், 19 கிலோ வெள்ளி கட்டிகளும் இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
தகவலறிந்து வந்த வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தினர். அப்போது அலுவலக சுவரில் ரகசிய அலமாரி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்தும் பணப்பை எடுக்கப்பட்டது.
முடிவில் அலுவலகத்தில் கிடைத்த ரூ.9 கோடியே 80 லட்சம் ரொக்கம், ரூ.13 லட்சம் வெள்ளி கட்டிகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கட்டுக்கட்டாக பணம், வெள்ளிக்கட்டிகள் எப்படி வந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்…பிரதமர் மோடியுடன் ம.பி முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் சந்திப்பு