சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 33, பெண்கள் 19 என மொத்தம் 52 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 34 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 53,552 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 15,193 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 28 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 334 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 53 ஆகவும், சென்னையில் 36 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிதாக கரோனா உயிரிழப்பு ஏதுமில்லை. இதுவரை கரோனாவால் 34,16,193 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 1 மாதக் காலத்தில் கரோனா இறப்பு என்பது இல்லை.
சென்னை ஐஐடியில் இதுவரை 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களில் 40 பேர் கரோனா தொற்றிலிருந்து சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர். 20 பேருக்கு மட்டுமே தற்போது மிதமான அளவில் தொற்று இருந்துக் கொண்டிருக்கிறது. தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு 24 மணிநேரமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாளை முதல்வர் ஆலோசனை: இந்நிலையில் சென்னை ஐஐடியில் ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களோடு தமிழக முதல்வர் தலைமையில் நாளை (ஏப்.25) கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளவிருக்கும் கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அறிவுறுத்த இருக்கிறார்” என்று தெரிவித்தார்.