சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.24) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
மேலும், வரும் ஏப்.25 முதல் ஏப் 28-ம் தேதி வரையிலான அடுத்த 4 நாட்களுக்கு, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் அதிகபட்சமாக 11 சென்டிமீட்டர் மழையும், வால்பாறையில் 9 சென்டிமீட்டரும், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் 8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.