சென்னை:
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படுவதாக ஒரு நாளிதழில் செய்தி வெளியானது. இதற்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும். தமிழ்நாடு அரசு தன்னுடைய மொழிக்கொள்கையை பல்வேறு காலகட்டங்களில் தெளிவுபடுத்தி உள்ளது. தாய்மொழியாகிய தமிழ், உலகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை மட்டுமே வழக்கத்தில் இருந்து வருகிறது.
நாளிதழில் வந்த செய்திபோன்று, மூன்றாவது மொழி, மும்மொழிக் கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படுகிறது என்ற கருத்து முற்றிலும் தவறானது. அதுபோன்று எந்த நடவடிக்கையும் அமல்படுத்தப்படவில்லை, அனுமதிக்கப்படவும் இல்லை. இருமொழிக் கொள்கைதான் அமல்படுத்தப்படுகிறது.
எனவே, தமிழ்நாடு அரசால் ஐயமற தெளிவுபடுத்தப்பட்ட மொழிப் பாடக் கொள்கை குறித்து உண்மைக்குப் புறம்பாக மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.