மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை, நடப்பாண்டில் பள்ளிகளில் 6-ம் முதல் 9-ம் வகுப்புவரை மூன்றாவது மொழித்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், “தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் நீண்ட காலமாக அமலில் உள்ள இருமொழிக் கொள்கையை மாற்றி மும்மொழிக் கொள்கையைப் புகுத்தும் நடவடிக்கைகள் சத்தமின்றி துவங்கியுள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
தாய்மொழியாகிய தமிழ், உலகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை மட்டுமே வழக்கத்தில் இருந்து வருகின்றன. 2006-ம் ஆண்டின் தமிழ்நாடு சட்டத்தின்படி ஒவ்வொரு மாணவரும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாகக் கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது என தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத மாணவர்களும், தமிழ் மொழியுடன் சேர்த்து அவர் தம் தாய் மொழியையும் விருப்பப் பாடமாகப் படித்து தேர்வு எழுதும் முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. எனவே தமிழ்நாடு அரசால் தெளிவுபடுத்தப்பட்ட மொழிப் பாடக் கொள்கை குறித்து உண்மைக்குப் புறம்பாக, மக்களைத் தவறாக வழி நடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம்” என பள்ளிக் கல்வித்துறை ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.