திராவிட மாடல் வளர்ச்சியால் முதலிடத்தை நோக்கி முன்னேறும் தமிழகம்… இப்தார் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை:
திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் சென்னை திருவான்மியூரில் நடத்தப்பட்ட ரமலான் இப்தார் – நோன்பு திறப்பு நிகழ்வில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-
இசுலாமியச் சமுதாயப் பெருமக்கள் இந்த ரமலான் மாதத்தை மிகமிகப் புனிதமான மாதமாகக் கடைபிடித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பசி, தாகம் ஆகியவற்றை மறந்து நோன்பு இருக்கிறார்கள், இதனைத் தங்கள் கடமையாக நினைத்துச் செய்கிறார்கள்.
மேலும், சிறுபான்மை இயக்கத்திற்கும் – திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்குமான நட்பு என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது – தொடரத்தான் போகிறது. அதில் யாரும் களங்கத்தையோ – பிரிவையோ ஏற்படுத்த முடியாது. கலைஞர் அவர்களின் வாழ்க்கையோடு இணைந்தும் பிணைந்தும் இருந்தவர்கள் இசுலாமியத் தோழர்கள்!
எதிர்க்கட்சியாக இருந்தபோதே சிறுபான்மையினர் உரிமைக்குக் குரல் கொடுத்த கழகம், ஆட்சி அமைத்த பின்னர் ஏராளமான சாதனைகளைச் செய்து கொடுத்தது.
கலைஞரின் வழியில் இப்போதும் சிறுபான்மையினருக்கான நன்மைகளை தொடர்ந்து செய்து வருகிறோம். அதில் மிக முக்கியமானது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் ஆகும்.
நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கேள்விக்குறியாக்கும் ஒன்றிய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானத்தை நான்தான் – கலைஞருடைய மகன்தான் – “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான்” கொண்டு வந்து நிறைவேற்றினேன். முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது என்பதுதான் உண்மை. இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
மாநிலங்களவையில் CAA-விற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்தான் அ.தி.மு.க. உறுப்பினர்கள். இந்தப் பத்துப் பேரும் ஆதரித்ததால்தான் அந்தச் சட்டமே நிறைவேறியது.
நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் – மக்களவையிலும் இதனை எதிர்த்து, மக்கள் மன்றத்தில் கையெழுத்து இயக்கம் நடத்திய கட்சி திமுக. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கட்சி தி.மு.க. – என்பதை யாரும் மறுக்கவோ – மறைக்கவோ முடியாது.
இந்த வரிசையில் இசுலாமிய சிறுபான்மையினர் சமுதாயத்திற்காக ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறோம்.
தமிழினத்தை சாதியால் – மதத்தால் பிரிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். அவ்வாறு செய்தால்தான் தமிழினத்தை அழிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். நம்மைப் பிளவுபடுத்துவதன் மூலமாக – நமது வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள். அதற்குத் தமிழினம் பலியாகிவிடக் கூடாது.  அதற்குப் பின்னால் இருக்கும் சதியை உணர்ந்து – தெளிந்து – புரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டில் அமைதி நிலவ வேண்டும், அமைதியான – நிம்மதியான நாடுதான் அனைத்துவிதமான வளர்ச்சியையும் பெறும். அத்தகைய வளர்ச்சிக்கான சூழ்நிலையை கடந்த ஓராண்டு காலத்தில் நம்முடைய அரசு உருவாக்கி உள்ளது.
அதனால்தான் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் வளர்ச்சியானது தமிழ்நாட்டை இந்தியாவின் சிறப்பான மாநிலங்களில் முதலிடத்தைப் பெறும் அளவிற்கு முன்னோக்கி நகர்த்தி வருகிறது.
இத்தகைய வளர்ச்சிக்கு அனைத்துத் தரப்பினரும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இப்தார் வாழ்த்துகள். 
இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.