திருப்பதி:
திருப்பதியில் தற்போது தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் காத்திருக்கும் அனைத்து அறைகளும் நிரம்பி வழிகிறது. தரிசனத்திற்கு சுமார் 5 மணி நேரம் வரை ஆகிறது.
ஏற்கனவே இலவச தரிசனத்தில் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஒரே நேரத்தில் பக்தர்கள் டோக்கன் கவுண்டர்களில் குவிந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து டோக்கன் முறை ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் பக்தர்கள் நேரடியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வைகுண்டம் காத்திருப்பு அறைகள் மற்றும் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், சீனிவாசம் உள்ளிட்ட இடங்களில் தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி, கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதன் பின்னர் ஜவஹர் ரெட்டி கூறியதாவது:-
திருப்பதியில் தற்போது பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்களின் கூட்டம் அதிகமானதால் வரிசையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக திருப்பதியில் அளிக்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டன.
அதை மீண்டும் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதற்குள் தரிசன வரிசையில் மாற்றங்கள் செய்யவும், முன்பைவிட வேகமாக இலவச தரிசன டோக்கன்கள் வழங்கவும் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டிக்கெட் வழங்கப்படும் 3 கவுண்டர்களில் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கவும், நிழற்கூரைகள் அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் நிறைவடைந்தவுடன் விரைவில் இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் டோக்கன் விநியோகம் தொடங்கப்படும் என்றார்.