திருப்பதியில் கட்டண தரிசனம், இலவச தரிசனம் ஆகிய இரு வழிமுறைகள் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அண்மையில் இலவச தரிசன டிக்கெட்டுகளை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டு மூன்று பக்தர்கள் காயமடைந்தனர்.
இதனையடுத்து இலவச தரிசன டோக்கன் வழங்கும் வழக்கமான நடைமுறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் நேரடியாக அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், இலவச தரிசனத்துக்கு டோக்கன் வழங்கும் நடைமுறையை மீண்டும் கொண்டு வர
திருமலை திருப்பதி தேவஸ்தானம்
முடிவு செய்துள்ளது.
கோடை விடுமுறை என்பதால் திருப்பதியில் தற்போது பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு இலவச தரிசனத்துக்காக டிக்கெட்களை மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிக்கெட் வழங்கப்படும் பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், சீனிவாசம் ஆகிய மூன்று கவுண்டர்களில் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்கவும், நிழற்குடைகள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் டோக்கன் விநியோகம் விரைவில் தொடங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.