சித்தோர்கர்: ராஜஸ்தானில் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்கார கொலை செய்து கிணற்றில் வீசி எறிந்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் பஸ்லி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் திருமண நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது தாயுடன் மூன்று வயது சிறுமியும் சென்றார். அப்போது திருமணத்தில் கலந்து கொள்ள வந்த இளைஞர் ஒருவரால் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் ெதாடர்பாக பில்வாரா மாவட்டம் கிஷன்புராவில் வசிக்கும் ராமேஷ்வர் தாகத் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘பஸ்ஸி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு திருமணம் நடைபெற்றது. அங்கு வந்த அனைவரும் திருமண சடங்குகளில் மும்முரமாக இருந்தனர். அதேபகுதியை சேர்ந்த பெண் தனது மூன்று வயது மகளுடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். தனது மகளை ஒரு அறையில் தூங்கவைத்துவிட்டு, திருமண சடங்கு வேலைகளை அந்தப் பெண் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திருமண விழாவிற்கு வந்த கிஷன்புராவைச் சேர்ந்த ராமேஷ்வர் தாகத் என்பவன், தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து தூக்கிக் கொண்டு சென்றார். திருமண நிகழ்ச்சி நடக்கும் இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒதுக்குபுறமான இடத்திற்கு கொண்டு சென்றார். பின்னர் அந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளான். அந்த சிறுமி சத்தமாக அழுதது. இருந்தும் அவன் அந்த சிறுமியை பயமுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்தான். பின்னர் அந்த சிறுமியை கழுத்தை நெரித்துக் கொன்று அருகில் இருந்த கிணற்றில் தூக்கி வீசிவிட்டு திருமண நிகழ்ச்சி நடந்த வீட்டிற்கு வந்தான். அங்கு நடந்த திருமண ஊர்வலத்திலும் கலந்து கொண்டான். திருமண நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்த உடன் தனது கிராமத்திற்கு திரும்பினான். இதற்கிடையே தனது மகளை காணவில்லை எனக்கூறி, அந்த சிறுமியின் தாய் அங்கும் இங்கும் தேடி வந்தார். மாலை வரை சிறுமியை காணாததால், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் விசாரணையில், சிறுமியை ராமேஷ்வர் தாகத் தூக்கிச் சென்றது தெரியவந்தது. அதையடுத்து கிராமத்தில் பதுங்கியிருந்த அவனை பிடித்து கடுமையாக விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்துக் கொன்று கிணற்றில் வீசிய குற்றத்தை ஒப்புக்கொண்டான். இதையடுத்து அவனை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றனர். இச்சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அம்மாநில ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின.