வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: தேசத்தின் ஆன்மாவை அறிய வேண்டுமானால், ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மகான் அரவிந்தர் 150வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக ஒரு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வந்தார். அரவிந்தரின் ஆசிரமத்துக்கு சென்ற அவர், அங்குள்ள அரவிந்தர் சமாதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை முடித்துக்கொண்டு காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழகத்திற்குச் சென்று ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்தநாள் விழாவில் அவர் பங்கேற்றார்.விழாவில் துணை நிலை கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அரவிந்தரும் இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ற புத்தகத்தினை அமித்ஷா வெளியிட்டார்.
பின்னர் அமித்ஷா பேசுகையில், அரவிந்தரின் ஆன்மீக சேவை, சுதந்திர போராட்ட பணிகள், குஜராத்தில் அரவிந்தர் ஆற்றிய பணிகள் குறித்து அமித்ஷா பாராட்டிப் பேசினார். மேலும் அவர் பேசியதாவது: தேசத்தின் ஆன்மாவை அறிய வேண்டுமானால், ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துக்களைப் படிக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஸ்ரீ அரவிந்தரை தேசத்தின் இளைஞர்கள் பின்பற்ற வேண்டும். குஜராத்தில் ஸ்ரீ அரவிந்தரோடு நிறைய குஜராத்திகள் பணிபுரிந்தனர். ஸ்ரீ அரவிந்தருக்கு 75 வயதாக இருந்தபோது, தேசம் சுதந்திரம் பெற்றது, அவரது 150வது பிறந்தநாள் கொண்டாடப்படும் போது, தேசம் அதன் 75வது சுதந்திரத்தைக் கொண்டாடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement