சென்னை: மத்திய, மாநில அரசுகள் வகுக்கின்ற திட்டங்களை எல்லாம் திறம்பட தேவைக்கேற்ப ஒருங்கிணைத்து கடைக்கோடி மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது அது உள்ளாட்சி அமைப்புகளால்தான் முடியும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில், தேசிய ஊராட்சிகள் தினத்தையொட்டி இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்களிடம் முதல்வர் கலந்துரையாடி, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் “தமிழக உள்ளாட்சி அமைப்புகள் பாரம்பரியமான, பழம்பெரும் வரலாறு கொண்டவை. இந்த மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டுகள் இதற்கு சான்றாக உள்ளன. ஊராட்சி அமைப்புகளை வலுப்படுத்தவும், வலிமைப்படுத்தவும், அதிகாரப் பரவலை உறுதிப்படுத்தவும் அரசியலமைப்புச் சட்டத்தின் 73-வது திருத்தம் ஊராட்சி அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தச் சட்டம் முதன்முதலாக நடைமுறைக்கு வந்த ஏப்.24 தேசிய ஊராட்சி தினமாக கொண்டாடப்படுகிறது.
ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால் அதற்கு தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும் நாம் பூர்த்தி செய்தாக வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை 17 வகையான நீடித்த வளர்ச்சிக்கு இலக்கணமாக (Sustainable development goals) அறிவித்துள்ளது. அதன்படி ஊராட்சிகளில் எல்லா அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி, தன்னிறைவு அடையக்கூடிய வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார் என்பது நாடறிந்த உண்மை.
அவர் கொண்டுவந்த திட்டம்தான் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம். அந்த திட்டத்தைப் புதுப்பொலிவோடு தற்போது நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறோம். முன்பெல்லாம் ஆண்டுக்கு 4 முறைதான், அதுவும் முறையாக கூட்டியதில்லை கிராம சபைக் கூட்டங்களை, இந்நிலையில் நேற்று முன்தினம் சட்டசபையில் நான் அறிவித்தேன், இனிமேல் கிராம சபைக் கூட்டங்கள் ஆண்டுக்கு 6 முறை கட்டாயமாக கூட்டப்பட வேண்டும் என்று 110-விதியின் கீழ் அறிவித்துள்ளேன்.
நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சிகள் நாளாக கடைபிடித்து, சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்குவது உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 7.46 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள 1.7 கோடி மகளிரினுடைய நிதி சுதந்திரத்தையும், நிதி மேலாண்மையையும் உறுதி செய்து தமிழக அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது. நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு கிராம ஊராட்சிகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு திராவிட மாடல் ஆட்சி என்பதை உலகிற்கு உணர்த்திடப் போகிறோம். நீடித்த இலக்குகளை எட்டுவதன் மூலம் இந்த கிராம ஊராட்சிகள் தேசிய அளவில் முன்மாதிரியாக விளங்கும். கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்க முன்மாதிரி கிராம விருது ,உத்தமர் காந்தி விருது அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படக்கூடிய சிறந்த தொழில் மற்றும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு விருது என அரசு பல்வேறு விருதுகளை அறிவித்து வருகிறோம்.
மாநில மற்றும் மத்திய அளவில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை எல்லாம் திறம்பட தேவைகேற்ப ஒருங்கிணைத்து கடைக்கோடி மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது அது உள்ளாட்சி அமைப்புகளால்தான் முடியும். ஏறக்குறைய 10 வருட காலமாக ஒரு ஆட்சி இருந்தது. அந்த ஆட்சியில் முறையாக உள்ளாட்சி அமைப்பு தேர்தலை கூட நடத்தமுடியாத நிலை இருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்தபின்னர், முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்திருக்கிறோம். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் நூற்றுக்கு நூறு ஆளுங்கட்சிதான் வந்திருக்கு என்றில்லை 90 லிருந்து 95 சதவீதம் திமுக வந்திருந்தாலும், ஒரு 5 சதவீதம் எதிர்கட்சியைச் சார்ந்தவர்களும் அந்த பொறுப்புக்கு வந்துள்ளனர். அவர்களை நாங்கள் எதிர்க்கட்சி என்று பார்க்காமல், அனைத்து ஊராட்சிகளுமே எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அந்த ஊராட்சிகளுக்கு என்னென்ன உதவிகள் வேண்டுமோ, என்னென்ன தேவைகள் அவசியமோ, செய்து கொடுக்கப்படும். குடிநீர் பிரச்சினை, ரேஷன் கடை பிரச்சினை, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வரக்கூடிய இடையூறுகள், நூறுநாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றித் தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளீர்கள், விரைவில் இவைகளை சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.