நைஜீரியா நாட்டில் உள்ள எண்ணெய்க் கிணறு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாகவும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த நாட்டின் காவல்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.
தீ விபத்து ஏற்பட்ட எண்ணெய்க் கிணறு சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டு வந்த கிணறு எனக் கூறப்படுகிறது. இந்த கிணறு நைஜீரிய நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒஹாஜீ எக்பிமா (Ohaji egbema) என்னும் பகுதியில் செயல்பட்டு வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த எண்ணெய்க் கிணறில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. யாரும் எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட விபத்தில், தீ இரண்டு எண்ணெய்க் கிணறுகளுக்கும் பரவி அந்தப் பகுதி முழுவதுமே தீக்கிரையானது.
இந்த விபத்து தொடர்பாக நைஜீரிய ஊடகங்களிடம் பேசிய அந்த நாட்டின் பெட்ரோலியம் துறை அதிகாரிகள், “சட்டத்துக்குப் புறம்பான இந்த எண்ணெய்க் கிணறில் திடீரென தீ பிடித்துள்ளது. இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் அடையாளம் தெரியாத வகையில் தீயில் கருகி இறந்துள்ளனர்” என்று தெரிவித்தனர்.
திடீரென தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும், பலி எண்ணிக்கை மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. போலீஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக எண்ணெய்க் கிணறின் உரிமையாளரைத் தேடி வருகின்றனர். வேலையின்மை மற்றும் வறுமை காரணமாக நைஜீரியா நாட்டில் சட்டத்துக்குப் புறம்பாகப் பல எண்ணெய்க் கிணறுகள் இயங்கி வருகின்றன. நைஜீரியாவைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள் வரி கட்டாமல் தப்பிப்பதற்காகவும், முறையாக விதிகளைப் பின்பற்றாமலும் சட்டத்துக்குப் புறம்பான எண்ணெய்க் கிணறுகளை ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் அமைத்துக் கொள்கிறார்கள். இத்தகைய சட்டவிரோத எண்ணெய்க் கிணறுகளில் அடிக்கடி தீ விபத்துகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் எண்ணெய்க் கிணறு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.