சண்டிகர்: பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக பகவந்த் மான் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், மாநிலத்தில் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சன்னி உட்பட 184 விஐபி.க்களுக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு நேற்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கூடுதல் டிஜிபி கடந்த 20-ம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ.க்கள் உட்பட விஐபி.க்களுக்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அவர்களுக்கு உள்ள அச்சுறுத்தலின் தன்மைக்கேற்ப போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்படுகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சன்னி தவிர குர்தர்ஷன் பிரார், ஐபிஎஸ் குர்தர்ஷன் சிங், உதய்பிர் சிங் (முன்னாள் கேபினட் அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவாவின் மகன்), முன்னாள் அமைச்சர்கள், சுர்ஜித் சிங் ராக்ரா, பிபி ஜகீர் கவுர், டோடா சிங், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. வரீந்தர் சிங் பாஜ்வா, முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தீப் மல்ஹோத்ரா, பாஜக மாநில துணைத் தலைவர் ராஜேஷ் பாகா, பாஜக நட்சத்திர பிரச்சாரகர் மஹி கில், மாவட்ட பாஜக தலைவர் ஹரிந்தர் சிங் கோலி உட்பட 184 பேரின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. முன்னதாக 122 எம்.பி., எம்எல்ஏ.க்களின் போலீஸ் பாதுகாப்பை பஞ்சாப் மாநில அரசு கடந்த மார்ச் 12-ம் தேதி விலக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.