திருமலை: ஆந்திராவில் படுக்கை அறையில் சார்ஜ் போடப்பட்ட மின்சார ஸ்கூட்டர் பேட்டரி அதிகாலையில் வெடித்து, வாலிபர் பலியானார். மேலும் அவரது மனைவி, 2 மகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திர மாநிலம், என்.டி.ஆர். மாவட்டம், விஜயவாடா சூர்யராவ்பேட்டையில் உள்ள குலாபிபேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார்(35), டிடிபி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஆர்த்தி(30), மகள்கள் பிந்து (10), சசி(6). இந்நிலையில் சிவக்குமார் நேற்று முன்தினம் கார்பெட் 14 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்திற்கு வாங்கினார். இரவு தனது வீட்டின் படுக்கை அறையில் சார்ஜ் செய்வதற்காக ஸ்கூட்டரில் இருந்து பேட்டரியை தனியாக எடுத்து சென்று சார்ஜ் போட்டு வைத்துவிட்டு குடும்பத்துடன் தூங்கி உள்ளார். நேற்று அதிகாலை 3 மணியளவில் பேட்டரி திடீரென வெடித்து, வீட்டில் உள்ள மின்சார ஒயர்களும் தீப்பிடித்து அறையில் இருந்து புகை வெளியேறியது. இதில் தீக்காயமடைந்த சிவக்குமார் குடும்பத்தினர் அலறியடித்து எழுந்தனர். மேலும் வீட்டில் இருந்து வெளியேற வழியில்லாமல், சமையலறைக்கு ஓடிச்சென்று அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் தீப்பிடித்து எரிவதை கண்டு, கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று படுகாயமடைந்த சிவக்குமார் குடும்பத்தினரை மீட்டனர். மேலும் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிவக்குமார் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி ஆர்த்தி, மகள்கள் பிந்துஸ்ரீ, சசி ஆகிய இரண்டு குழந்தைகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.