மார்ச் முதல் ஜூன் வரை பொல்லாத காலம். வெயில் மண்டையை பிளக்கும். அனல் காற்று உடலை அடுப்பே இல்லாமல் எரிக்கும். வீட்டில் இருக்கும் ஒன்றிரண்டு பேன்கள், ஏசி.களால் மட்டுமே இரவு நேர தூக்கம் சொர்க்கமாகும். பகலெல்லாம் உழைப்பு. இரவெல்லாம் தூக்கம். மறுநாள் பழைய பல்லவி வாழ்க்கை. சமான்ய, நடுத்தர மக்களுக்கு மின்சாரம் இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம். இல்லாமல் போனால் நரகமே… இந்தியாவில் பல மாநிலங்களில் இப்போதே ‘பவர் கட்’ பிரச்னை தொடங்கி விட்டது. இது, இரவு நேர நிம்மதி தூக்கம் என்ற ஒற்றை இன்பத்துடன் முடிந்து விடும் கதையல்ல. நாடே ஸ்தம்பிக்கும். தொழில் துறை முடங்கும். உற்பத்தி பாதிக்கும். தொழில் நிறுவனங்கள் வருமானம் இன்றி தவிக்கும். இப்படிப்பட்ட நிலையை நோக்கிதான் இந்தியா இப்போது சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பக் கட்ட அடியிலேயே 12க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாதித்துள்ளன. அதில் முக்கியமானவை மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், உத்தர பிரதேசம், ஆந்திரா. அதோடு, பல மணி நேர மின்வெட்டால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன இயந்திரங்கள் ஓய்வெடுக்கின்றன. பகல் தூக்கம் போடுகின்றன. இவற்றின் முடிவு எதில் முடியும்? வேலை வாய்ப்பு இழப்பு. பல கோடி தொழிலாளர்கள், அவர்களின் குடும்பம் சாலைக்கு வரும். போராட்டங்கள் வெடிக்கும்.இது மட்டுமா? இது ஒரு சங்கிலி தொடர் பிரச்னை. சாமான்ய மக்கள் முதல் பொருளாதார வளர்ச்சி வரை அத்தனையையும் பதம் பார்க்கும். அனல் மின் நிலையங்களை நம்பியே இந்தியா அதிகம் இருக்கிறது. ஆனால், மின்சார உற்பத்திக்கு தேவையான ஒரே எரிபொருள் நிலக்கரி. அதற்குதான் கடும் பற்றாக்குறை. இந்தியாவின் மொத்த அனல் மின் நிலையங்களின் எண்ணிக்கை 173. இவற்றில் 100 அனல் நிலையங்கள், நிலக்கரி இல்லாமல் தவிக்கின்றன. வழக்கமாக, 22 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு இருக்க வேண்டும். அவற்றின் அளவு 6 கோடியே 60 லட்சத்து 27 ஆயிரம் டன். ஆனால், இப்போது இருப்பதே வெறும் 2 கோடியே 22 லட்சத்து 52 ஆயிரம் டன் மட்டுமே. இதற்கு 8 நாள் மின் உற்பத்திக்கு மட்டுமே போதுமானது. இதற்கு முன், 2014ம் ஆண்டில்தான் இப்படிப்பட்ட மோசமான நிலை இருந்தது.மின்சார தட்டுப்பாடு பிரச்னை என்பது இந்தியாவுக்கு புதிதல்ல. ஒவ்வொரு ஆண்டும் வரக் கூடிய கோடைக்கால நோய்தான். கடந்தாண்டு அக்டோபரில் தான் எரிபொருள் பற்றாக்குறை பிரச்னை ஏற்பட்டது. இப்போது, மார்ச் மாதமே தொடங்கி விட்டது, இதுதான் மிகப்பெரிய அபாய சங்கு. ஆரம்பமே இப்படி என்றால், அடுத்து வரும் மாதங்கள் எப்படி? சமாளிப்பது மிகவும் கடினம். நாட்டின் தொழில் துறையின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம். அதற்கு அடுத்து இருப்பது, சிறு, குறு, நடுத்தர தொழில் துறைகள். இந்தியாவில் தற்போது, 6 கோடியே 3 லட்சத்து 5 ஆயிரம் சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. அதற்கு அடுத்து 33 லட்சம் குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. 5 ஆயிரம் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இது, 2020, மே மாத கணக்கெடுப்பு புள்ளி விவரம். இவற்றில் பெரும்பாலனவை மக்களின் அன்றாட வாழ்க் கையோடு பின்னி பிணைந்தவை.சாக்லெட் தயாரிப்பு, பேப்பர் நாப்கின், டாய்லெட் பேப்பர், சானிடரி நாப்கின், மெழுகு வர்த்தி, பினாயில், ஒருமுறை பயன்படுத்தி விட்டு வீசக் கூடிய பேப்பர் கப், பிளேட்டுகள், பள்ளி நோட்டு புத்தங்கள். மசாலா பொருட்கள் – இவை எல்லாம் சிறுதொழில் நிறுவனங்களி்ன் உற்பத்தி சார்ந்தவை. இவற்றில்தான் பல நூறு லட்சம் பாமர தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். மின்சார பற்றாக்குறையால் இவர்களின் வாழ்க்கையில் தான் முதலில் மண் விழும். அடுத்து வருவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலாக உள்ள 3 தொழில் துறைகள். கச்சா பொருட்கள் உற்பத்தி. தொழில்துறையில் முதன்மையானது இதுதான். அடுத்து வருவது உற்பத்தி. இது, 2வது முக்கியத்துவத்தை பெற்றது. 3வது வருவது சேவை. முதல் 2ம் செயல்பட்டால் மட்டுமே இதற்கு வாய்ப்பு கிடைக்கும். இவை எல்லாமே ஒட்டு மொத்தமாக முடங்கும் நிலைக்கு தான் நாட்டின் மின்சார உற்பத்தி பாதிப்பு தள்ளி கொண்டிருக்கிறது.ஒன்றிய மின் ஆணையத்தின் புள்ளி விவரத்தின்படி, 150 அரசு அனல் மின் நிலையங்களில் 81ல், நிலக்கரி கையிருப்பு மிகவும் மோசமாக இருக்கிறது. ஆனால், மின்சார தேவை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகிறது.2019ல் 1.6 லட்சம் கோடி யூனிட்டாக இருந்த மின்சார தேவை, 2020ம் ஆண்டில் 1.24 லட்சம் கோடி யூனிட்டாக உயர்ந்துள்ளது. 2022ம் ஆண்டில் 1.32 லட்சம் கோடி யூனிட்டாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சப்ளை- தேவைக்கான இடைவெளி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப நிலக்கரி சப்ளை செய்யப்படுவது இல்லை. இதனால், மின்சார உற்பத்தி பாதிக்கப்படுகிறது. உதாரணமாக, மகாராஷ்டிராவில் மட்டுமே தேவைக்கும் சப்ளைக்கும் இடையிலான இடைவெளி 3,500 – 4000 மெகாவாட்டாக இருக்கிறது. இதை சமாளிப்பதற்கு மாற்று வழியை தேட வேண்டிய கட்டாயம் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் ஒன்றிய அரசின் அலட்சியமே. நிலக்கரி பற்றாக்குறை சமாளிக்க, பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாநிலங்களிலும் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை நேரடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றன. மகாராஷ்டிரா அரசு ஒருபடி மேலே போய், சட்டீஸ்கர் மாநிலத்தில் தனக்கென தனி நிலக்கரி சுரங்கத்தையே வாங்க பரிசீலித்து வருகிறது.* இப்போது செய்தால் கஜானா காலியாகும்நமது நாட்டில் பெரும்பாலும் உள்நாட்டில் உற்பத்தியாகும் நிலக்கரியே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி நடக்கும். ஆனால், உக்ரைன்- ரஷ்யா போரினால் ரஷ்யாவில் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மற்ற வெளிநாடுகளில் நிலக்கரியின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. அதை இந்தியா வாங்க முயற்சி செய்தால், கஜானா தான் காலியாகும். 38 ஆண்டுக்கு இப்படிதான்…* நாட்டில் தற்போது விவசாய பாசனம், வீடுகள், அலுவலகங்களில் குளிர்சாதன வசதி பயன்பாடு அதிகமாகி வருவதால், அடுத்த 38 ஆண்டுக்கு இதுபோன்ற மின்சார தட்டுப்பாடு நிலவும் என கணக்கிடப்பட்டு உள்ளது.* இந்தியாவில் உள்ள 175 அனல் மின் நிலையங்களில் 100ல் நிலக்கரி பற்றாக்குறை நிலவுகிறது. இவற்றில் 40 அரசு சார்ந்த மின் நிலையங்கள், 10 மாநிலங்களில் உள்ளன. இவற்றில் முக்கியமானவை ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் அதிகமாக பாதித்துள்ளன. மற்றவை தனியார் அனல் மின்நிலையங்கள். * 10% இறக்குமதி செய்யலாம் ஆனா, 40% கட்டணம் உயரும்நாட்டில் ஏற்பட்டுள்ள நிலக்கரி பற்றாக்குறையை சமாளிக்க, வெளிநாடுகளில் இருந்து அடுத்த சில மாதங்களுக்கு 10 சதவீதம் வரையில் நிலக்கரியை இறக்குமதி செய்யலாம் என ஒன்றிய மின் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. அதே நேரம், ‘நிலக்கரி இறக்குமதி காரணமாக மின்சார உற்பத்தி செலவு 30-40 சதவீதம் அதிகரிக்கும். இதனால், மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைமை வரலாம்,’ என்று எச்சரித்துள்ளது.* உற்பத்தியில் சட்டீஸ்கர்நாட்டிலேயே சட்டீஸ்கர் மாநிலத்தில்தான் நிலக்கரி சுரங்கங்கள் அதிகம் உள்ளன. உற்பத்தியும் இங்கு தான் அதிகம். கடந்த 2020-2021ம் நிதியாண்டில் 158.409 மெட்ரிக் டன் நிலக்கரியை இந்த மாநிலம் உற்பத்தி செய்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் ஒடிசா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளன.* வளத்தில் ஜார்க்கண்ட்அதே நேரம், ஜார்க்கண்ட் மாநிலத்தில்தான் நிலக்கரி வளம் அதிகமாக இருக்கிறது. இங்கு 8.3 லட்சம் கோடி டன் நிலக்கரி உள்ளது. இது, நாட்டின் மொத்த நிலக்கரி வளத்தில் 26 சதவீதமாகும்.பற்றாக்குறை… சில முக்கிய காரணங்கள்* கொரோனா முடக்கத்துக்குப் பிறகு தொழிற்சாலை செயல்பாடுகள் அதிகமாகி இருப்பது.* மார்ச் ஆரம்பத்திலேயே வெயில் உச்சத்தை தொட்டு இருப்பது.* பல்வேறு வடக்கு, மத்திய மாநிலங்களில் இந்த மாதம் வெயில் அதிகமாக அடித்து நொறுக்கி கொண்டிருப்பது.* இரவு நேரங்களில் மக்கள் அதிகளவில் ஏசி போடுவது.* இறக்குமதி செய்வதில் உலகளவில் 2வது இடம்என்னதான் உலகளவில் அதிகமாக நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் இருந்தாலும், அதிகமாக இதை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலிலும் 2வது இடத்தைதான் பிடித்துள்ளது. இந்தோனேஷியா, ஆஸ்திரலேியா, தென் ஆப்ரிக்கா, அமெரிக்காவில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது.* இறக்குமதி விவரம்ஆண்டு இறக்குமதி 2018-2019 23.535 கோடி டன்2019-2020 24.825 கோடி டன்2020-2021 21.525 கோடி டன்2021-2022 17.332 கோடி டன்* முதல் அரக்கன் சீனாஇரண்டாவது இந்தியாஉலகளவில் நிலக்கரி உற்பத்தியில் அரக்கனாக இருப்பது சீனாதான். உலகின் மொத்த உற்பத்தியில் 47 சதவீதத்தை இதுதான் உற்பத்தி செய்கிறது. கடந்த 2019ம் ஆண்டில் இதன் மொத்த உற்பத்தி 370 கோடி டன். அதே நேரம், உலகளவில் அதிகமாக நிலக்கரியை பயன்படுத்துவதும் இதுதான். உலகின் மொத்த பயன்பாட்டில் 53 சதவீதத்தை இதுவே பயன்படுத்துகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 76 கோடியே 16 லட்சத்து 62 ஆயிரத்து 38 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்படுகிறது (2016 புள்ளி விவரப்படி). இதன்மூலம், உலகின் 2வது மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நாடு என்ற பெருமை அது பெற்றுள்ளது.