இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக பிலாவல் புட்டோ சர்தாரி, இரண்டு நாட்களில் பதவி ஏற்க உள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் பிரதமராக இருந்த இம்ரான் கான் பதவியை இழந்தார். இதையடுத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைந்து, ஆட்சி அமைத்தன. பாக்., முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சித் தலைவரான ஷெபாஸ் ஷெரீப், நாட்டின் பிரதமராக பதவி ஏற்றார்.
கடந்த வாரம் ஷெபாஸ் ஷெரீப்பின் அமைச்சரவையும் பதவி ஏற்றது. எனினும், அப்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாக்., மக்கள் கட்சியின் தலைவரான பிலாவல் புட்டோ சர்தாரி, 33, பதவி ஏற்கவில்லை.பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு சென்ற அவர், பாக்., முன்னாள் பிரதமரும், தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் சகோதரருமான நவாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் அடுத்த ஓரிரு நாட்களில், பாக்., வெளியுறவுத் துறை அமைச்சராக பிலாவல் புட்டோ பதவி ஏற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை, அவரது கட்சியின் மூத்த தலைவர் கமார் ஜமான் கைரா நேற்று உறுதி செய்தார். மறைந்த முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோ என்பது குறிப்பிடத் தக்கது.
பெனசிர் உயிருடன் இருந்தபோது, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடனும், அவரது கட்சியினருடனும், கடுமையான மோதல் போக்கை பின்பற்றி வந்தார். தற்போது நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக உள்ளார். அவரது அமைச்சரவையில் பெனசிரின் மகன் இணையவுள்ளார்.
Advertisement