ஆமதாபாத் : குஜராத் மாநில காங்கிரஸ் தலைமையை கடுமையாக சாடிய போதிலும் அக்கட்சியில் இருந்து வெளியேறும் எண்ணமில்லை என, படிதார் சமூக தலைவர் ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.குஜராத்தில், முதல்வர் பூபேந்திரபாய் படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, 2015ல் குஜராத்தில் படிதார் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்க்கக் கோரி போராடியவர் ஹர்திக் படேல். கடந்த 2019ல் லோக்சபா தேர்தலுக்கு முன், காங்., கட்சியில் இணைந்தார். குஜராத் சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, படிதார் தலைவர் நரேஷ் படேலை காங்கிரசில் சேர்க்க முயற்சி நடக்கிறது. இது, ஹர்திக் படேலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நரேஷ் படேல் இணைந்தால், தன் மதிப்பு குறைந்து விடும் என ஹர்திக் கருதுகிறார். இதையடுத்து, ‘பா.ஜ., போல சரியான அரசியல் முடிவுகளை எடுக்கும் திறமை மாநில காங்., தலைமைக்கு இல்லை என்ற உண்மையை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்’ என பகிரங்கமாக தெரிவித்தார்.
இதனால், ஹர்திக் படேல் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து செய்தியாளர்களிடம் ஹர்திக் படேல் பேசியதாவது:நான் காங்.,கில் இருந்து விலக மாட்டேன். மக்கள் நலனுக்காக ஏதாவது முடிவு எடுக்க நினைத்தால், அதை அவர்களிடம் வெளிப்படையாக தெரிவித்து கருத்து கேட்பேன். இவ்வாறு அவர் பேசினார்.எனினும், ஹர்திக் படேல் விரைவில் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement