மும்பை: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவிடம் இருந்து எம்.எப். உசைன் ஓவியத்தை ரூ.2 கோடிக்கு வாங்கும்படி முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோராவால் கட்டாயப்படுத்தப்பட்டேன். இது, பத்ம பூஷண் விருது கிடைக்க உதவி செய்யும் என முரளி தியோரா கூறியதாக, மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள யெஸ் வங்கி நிறுவனர் ராணாகபூர் கூறியுள்ளதாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமை இடமாக வைத்து, யெஸ் பேங்க் செயல்படுகிறது. இதன் நிறுவனர் ராணா கபூர் முறைகேடாக கடன்களை வழங்கி, அதற்கு ஆதாயமாக தன் குடும்பத்தினர் நடத்தும் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் பெற்றதாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.இது தொடர்பாக ராணா கபூர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அமலாக்கத் துறை, மும்பை தனி நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.அதில் ராணா கபூர் கூறியதாக கூறப்படடுள்ளதாவது:
காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்காவிடம் இருந்து எம் எப். ஹூசைனின் ஓவியத்தை வாங்க என்னை , முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவருமான, முன்னாள் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருமான முரளி தியோரா கட்டாயப்படுத்தினார். ஓவியத்தை வாங்க மறுத்தால், அது சோனியா குடும்பத்திற்கு நட்புறவை வளர்த்து கொள்வதை தடுப்பது மட்டுமல்லாமல், யெஸ் வங்கிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என முரளி தியோரா கூறினார். அத்துடன், நான் ‘ பத்ம பூஷண்’ விருது பெறுவதையும் அது தடுக்கும் என்றும் அவர் கூறினார்.
அச்சுறுத்தலின் கீழ் மற்றும் எனது குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாகவும், சோனியா மற்றும் மிலிந்த் தியோராவின் குடும்பத்தை பகைத்து கொள்ள விரும்பாததாலும் ஓவியத்தை வாங்க ஒப்பு கொண்டேன். ஓவியத்தை வாங்குவதற்கு நான் கொடுத்த செக், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சோனியா சிகிச்சை பெற பயன்படுத்தப்பட்டதாக மிலிந்த் தியோரா என்னிடம் கூறினார். அதேநேரத்தில் முரளி தியோரா எனக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
அதற்குப் பிறகு சோனியாவின் அரசியல் ஆலோசகரான அகமது படேல் என்னிடம், சோனியாவிற்கு சிகிச்சைக்கு தேவைப்பட்ட நேரத்தில் ஓவியத்தை வாங்கி , அவரின் குடும்பத்திற்கு நற்செயலை செய்துள்ளதாகவும், இதன் மூலம் எனது பெயர் பத்ம பூஷண் விருதுக்கு பரிசீலனை செய்யப்படும் எனவும் கூறினார். இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement