Was forced to buy M F Husain painting from Priyanka Gandhi, paid Rs 2 crore: Rana Kapoor in ED chargesheet: காங்கிரஸின் பிரியங்கா காந்தியிடம் இருந்து எம்.எஃப் ஹுசைன் ஓவியத்தை வாங்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அதை விற்ற பணத்தை காந்தி குடும்பத்தினர் நியூயார்க்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்தியதாகவும், யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூர், அமலாக்க இயக்குனரகத்திடம் தெரிவித்துள்ளதாக, சிறப்பு நீதிமன்றத்தில் பெடரல் பணமோசடி தடுப்பு ஏஜென்சி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
எம்.எஃப் ஹுசைன் ஓவியத்தை வாங்க மறுப்பது காந்தி குடும்பத்துடன் உறவை வளர்த்துக்கொள்வதைத் தடுப்பது மட்டுமின்றி ‘பத்ம பூஷண்’ விருது பெறுவதையும் தடுக்கும் என்று அப்போதைய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா தன்னிடம் கூறியதாகவும் ராணா கபூர் அமலாக்கத்துறையிடம் தெரிவித்துள்ளார்.
ராணா கபூரின் தற்போதைய அறிக்கைகளானது, யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூர், அவரது குடும்பத்தினர், திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL) விளம்பரதாரர்கள் கபில் மற்றும் தீரஜ் வாத்வான் மற்றும் பிறருக்கு எதிராக சமீபத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பணமோசடி வழக்கின் இரண்டாவது துணை குற்றப்பத்திரிகையின் (ஒட்டுமொத்த மூன்றாவது) ஒரு பகுதியாகும்.
ரூ2 கோடி காசோலையை செலுத்தியதாகக் கூறிய ராணா கபூர், “பின்னர் அந்த விற்பனையில் கிடைத்த வருமானத்தை காந்தி குடும்பத்தினர் நியூயார்க்கில் சோனியா காந்தியின் மருத்துவ சிகிச்சைக்காகப் பயன்படுத்தியதாக மிலிந்த் தியோரா (மறைந்த முரளி தியோராவின் மகன் மற்றும் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.) ரகசியமாகத் தெரிவித்தார்.” என்று கூறியுள்ளார்.
சோனியா காந்தியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவரான அகமது படேல், சோனியா காந்திக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தகுந்த நேரத்தில் காந்தி குடும்பத்திற்கு ஆதரவளித்ததன் மூலம், நான் (ராணா கபூர்) காந்தி குடும்பத்திற்கு ஒரு நல்ல செயலைச் செய்தேன் என்றும், ‘பத்ம பூஷன்’ விருதுக்கு உங்கள் பெயர் முறையாக பரிசீலிக்கப்படும் என்றும் கூறியதாக ராணா கபூர் அமலாக்கத்துறையிடம் தெரிவித்தார்.
அந்த ஓவியத்தை வாங்க மறுப்பது காந்தி குடும்பத்துடன் உறவை வளர்த்துக் கொள்ள அவரை அனுமதிக்காது என்று முரளி தியோரா, ராணா கபூரை நம்ப வைக்க முயன்றார். குற்றப்பத்திரிகையின்படி அவருக்கு பத்ம பூஷண் விருது கிடைப்பதையும் இது தடுக்கும்.
மறைந்த தியோரா இரவு உணவின் போது ராணா கபூரிடம், ஓவியத்தை வாங்கத் தவறினால் அவருக்கும் யெஸ் வங்கிக்கும் “பாதகமான விளைவுகளை” ஏற்படுத்தக்கூடும் என்று கூறியதாக ராணா கபூர் அமலாக்கத்துறைக்கு அளித்த அறிக்கையில் கூறியுள்ளார்.
மார்ச் 2020 இல் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராணா கபூர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
பிரியங்கா காந்தியிடமிருந்து ராணா கபூர் வாங்கியதாகக் கூறப்படும் ஓவியம் குறித்து குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது, “இது கட்டாய விற்பனை என்று முதலில் கூற விரும்புகிறேன், அதை நான் வாங்க தயாராகவே இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரியங்கா காந்தியிடமிருந்து எம்.எஃப் ஹுசைன் ஓவியத்தை வாங்க செய்ய அவரை வற்புறுத்துவதற்காக மிலிந்த் தியோரா அவரது (ராணா கபூரின்) வீடு மற்றும் அலுவலகத்திற்கு பலமுறை சென்றுள்ளார்.
“இது தொடர்பாக அவர் பல மொபைல் எண்களில் இருந்து எனக்கு பல அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். உண்மையில், அந்த ஓவியத்தை வாங்க நான் மிகவும் தயங்கினேன், மேலும் அவரது அழைப்புகள்/குறுஞ்செய்திகள் மற்றும் தனிப்பட்ட சந்திப்புகளைப் புறக்கணிப்பதன் மூலம் இந்த ஒப்பந்தத்தைத் தவிர்க்க நான் பலமுறை முயற்சித்தேன், ”என்று ராணா கபூர் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.
“இந்த ஒப்பந்தத்தைத் தவிர்க்க நான் என்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், ஒப்பந்தத்தை விரைவாக முடிக்க அவர்கள் விடாப்பிடியாக இருந்தனர்,” என்று ராணா கபூர் கூறியுள்ளார்.
பின்னர், 2010 ஆம் ஆண்டில், புது டெல்லியில் உள்ள அவரது லோதி எஸ்டேட் பங்களாவில் சைவ விருந்துக்கு (மார்வாரி இரவு உணவு) தன்னைச் சந்திக்கும்படி முரளி தியோரா கட்டாயப்படுத்தியதாகவும் ராணா கபூர் கூறியுள்ளார்.
அந்த நேரத்தில் பெட்ரோலிய அமைச்சராக இருந்த முரளி தியோராவுக்கு, இந்த பங்களா ஒதுக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் ராணா கபூர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: ஒவ்வொரு கட்சியாக மாறும் பிரசாந்த் கிஷோர்; தற்போதைய முடிவு என்ன?
இந்த சந்திப்பின் போது, மறைந்த முரளி தியோரா, மேற்கூறிய ஓவியத்தை வாங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால், எனக்கும் எனது யெஸ் வங்கிக்கும் பாதகமான விளைவுகள் ஏற்படும் என்றும், அது தியோரா குடும்பத்துடனான எனது உறவை பாதிக்கலாம் என்றும் நிச்சயமற்ற முறையில் என்னிடம் கூறினார்” என்று ராணா கபூர் கூறியுள்ளார்.
“அதே நேரத்தில், காந்தி குடும்பத்துடன் எனக்கு ஒரு உறவை உருவாக்க அது என்னை அனுமதிக்காது என்று அவர் என்னை நம்ப வைக்க முயன்றார்,” என்றும் ராணா கபூர் கூறியுள்ளார்.
மேலும், அந்த அறிக்கையில், ராணா கபூர் கூறும்போது, “ஒப்பந்தம் முடிவடையாத காரணத்தால் எனது தரப்பில் ஏதேனும் விலகல் ஏற்பட்டால், அது ‘பத்ம பூஷன்’ விருதை நான் பெறுவதை தடுக்கும் என்றும் அவர் (முரளி தியோரா) என்னிடம் கூறினார். அந்த நேரத்தில் அந்த விருதுக்கு நான் மிகவும் தகுதியானவனாக இருந்தேன்.
“இந்த அச்சுறுத்தலின் கீழ் மற்றும் எனது குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக, நாங்கள் கலை பொருட்கள் சேகரிப்பாளர்கள் இல்லை என்ற நிலையிலும், சம்பந்தப்பட்ட இரண்டு சக்திவாய்ந்த குடும்பங்களுடன் எந்த விதமான பகைமையையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று ராணா கபூர் கூறியதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தை முடிப்பதற்கான சம்பிரதாயங்கள் பிரியங்கா காந்தியின் அலுவலகத்தில் நடைபெற்றதாக ராணா கபூர் அமலாக்கத்துறையிடம் தெரிவித்துள்ளார்.
“மிலிந்த் தியோரா இந்த இறுதி நிறைவு கூட்டத்தை தீவிரமாக ஒருங்கிணைத்திருந்தார். இந்த ஒப்பந்தத்திற்காக, எச்எஸ்பிசி வங்கியில் எனது தனிப்பட்ட கணக்கின் காசோலை மூலம் 2 கோடி ரூபாய் செலுத்தியுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றும் ராணா கபூர் கூறியுள்ளார்.
ராணா கபூர் மற்றும் திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL) விளம்பரதாரர்கள் கபில் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகியோர் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மூலம் 5,050 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியை மோசடி செய்ததாக அமலாக்க இயக்குநரகம் (ED) குற்றம் சாட்டியுள்ளது.
மார்ச் 3, 2020 அன்று ECIR ஐப் பதிவுசெய்த பிறகு அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது, மேலும் விசாரணை தொடங்கிய பிறகு, ராணா கபூர் தனது வெளிநாட்டு சொத்துக்களை PMLA இன் கீழ் ED யால் இணைப்பதில் இருந்து காப்பாற்ற முயன்றார் என்று குற்றப்பத்திரிகை கூறுகிறது.
இந்த வழக்கில் சிக்கிய பிஓசி ரூ.5,050 கோடி. ராணா கபூர் DUVPL என்ற நிறுவனத்தின் நிறுவனர் என்றாலும், அவரது மூன்று மகள்கள் அதில் 100 சதவீத பங்குதாரர்களாக உள்ளனர்.
இந்த வழக்கில் மார்ச் 2020ல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராணா கபூர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்ட கபில் மற்றும் தீரஜ் வாத்வான்களும் சிறையில் உள்ளனர்.