ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வரும் இமானுவேல் மேக்ரோனின் பதவி காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து அந்நாட்டுக்கான 12ஆவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. பிரான்ஸ் நாட்டில் இரண்டு சுற்று நேரடி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு அதன் மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். முதல் சுற்று வாக்குப்பதிவில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை பெறுபவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை என்றால், இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நடைபெறும். முதல் சுற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற இரண்டு வேட்பாளர்களுக்கு இடையே இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படும்.
முதல் சுற்றில், குடிமக்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளர்கள் எவருக்கும் வாக்கு செலுத்தலாம், ஆனால், இரண்டாவது சுற்றில் இரண்டு வேட்பாளர்களில் ஒருவருக்கு மட்டும்தான் வாக்களிக்க முடியும். அந்நாட்டின் தேர்தல் வரலாற்றில் எந்த வேட்பாளரும் முதல் சுற்று வாக்கெடுப்பின் மூலம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை என்பது கவனிக்கத்தக்கது.
பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு, கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில், தற்போதைய அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான
இமானுவேல் மேக்ரோன்
வலதுசாரி வேட்பாளரான
மரின் லி பென்
ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. எதிர்பார்த்தப்படியே, இமானுவேல் மேக்ரோன் 27.85 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்தார். அவருக்கு அடுத்த இடத்தை மரின் லி பென் பிடித்தார். யாருக்கும் 50 சதவீதம் என்ற பெரும்பான்மை கிடைக்கவில்லை.
தொடரும் போர்: ரஷ்யா, உக்ரைன் அதிபர்களை சந்திக்கும் ஐநா பொதுச்செயலர்!
இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இமானுவேல் மேக்ரோன் – மரின் லி பென் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர். இரண்டாம் சுற்றான இன்று பதிவாகும் வாக்குகள் வருகிற திங்கள் கிழமை எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலில் இமானுவேல் மேக்ரோன் 66.10 சதவீத வாக்குகளையும், மரின் லி பென் 33.90 சதவீத வாக்குகளையும் பெற்றனர். ஆனால், இந்த முறை 57.5 சதவீத வாக்குகளை இமானுவேல் மேக்ரோன் பெறுவார் எனவும், 42.5 சதவீத வாக்குகளை மரின் லி பென் பெறுவார் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன.
இந்த தேர்தலில் இமானுவேல் மேக்ரோன் வெற்றி பெற்றால் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியில் உள்ள ஒருவர் மீண்டும் தேர்வாகிய பெருமையை பெறுவார். அதேசமயம், மரின் லி பென் வெற்றி பெறும் பட்சத்தில் பிரான்ஸ் அதன் முதல் பெண் அதிபரை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.