புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, நடப்பாண்டில் ரூ.2000 கோடி கூடுதல் நிதி உட்பட 7 அம்ச கோரிக்கைகளை கொண்ட மனுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதல்வர் ரங்கசாமி விமான நிலையத்தில் அளித்தார்.
புதுச்சேரிக்கு ஒரு நாள் பயணமாக வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை டெல்லிக்கு புறப்பட்டார். அவரை வழியனுப்ப விமான நிலையத்துக்கு சென்றபோது முதல்வர் ரங்கசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் 7 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து நிறைவேற்ற வலியுறுத்தினார்.
அம்மனு விவரம்: புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து கோரி்ககை நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினையாகும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால், அதிக தொழிற்சாலைகளை வரவழைக்கவும், வேலைவாய்ப்பு உருவாக்குதல் உள்ளிட்ட எந்த அதிகாரத்தையும் எங்களால் செயல்படுத்த முடியவில்லை.
மத்திய அரசின் நிதி உதவி கூடுதலாக தேவை. நடப்பாண்டில் குறைந்தபட்சம் ரூ.2000 கோடி தேவை. நடப்பாண்டில் ஜிஎஸ்டி இழப்பீடு நீட்டிக்கப்படாவிட்டால், கடந்தாண்டை விட ரூ. 150 கோடி வரை குறைவாகத்தான் மத்திய அரசு நிதி உதவி கிடைத்தாக இருக்கும். அதனால் கூடுதல் நிதி உதவி தேவை. மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களில் இதர யூனியன் பிரதேசங்களுக்கு இணையாக புதுச்சேரி நடத்தப்படுவதுடன், 100 சதவீத நிதியுதவியை மத்திய அரசு வழங்கும் திட்டங்களில் தரவேண்டும்.
புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். தற்போது விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழகத்தில் 395 ஏக்கர் நிலமும், புதுச்சேரியில் 30 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்படவேண்டும். இதற்கு ரூ.425 கோடி நிதி தேவை. புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டப்படவேண்டும். அதற்கு தோராயமாக ரூ. 300 கோடி மானியம் தேவை. சுகாதார உட்கட்டமைப்புக்கு சிறப்பு உதவியாக ரூ. 500 கோடி தேவை. அதேபோல் கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்த ரூ.500 கோடி நிதி உதவி தேவை. துரதிர்ஷ்டவசமாக கடந்த அரசானது, கூட்டுறவுத் துறையின் பல நிறுவனங்களின் செயல்பாடுகளை முற்றிலுமாக புறக்கணித்ததால் அவை மோசமான நிலையிலுள்ளன.” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.