புதுச்சேரி: புதுச்சேரி வருகை தந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 123 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தி திணிப்பு, நீட் தேர்வு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை முடக்குவது, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தலைவர் வீரமோகன் தலைமையில் புதுவை பெரியார் சிலை அருகே ஒன்று கூடினர். அவர்கள் கையில் கறுப்புக்கொடியுடன் அமித் ஷாவை திரும்ப போக வலியுறுத்தி முழக்கமிட்டனர். திடீரென அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அமித் ஷாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
போலீஸார் அதனை பறிக்க முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த இடத்தில் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 123 பேரை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இப்போராட்டத்தில் துணைத்தலைவர் இளங்கோ, செயலாளர் சுரேஷ், புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி அருள் ஒளி, இந்திய தேசிய இளைஞர் முன்னணி தாமரைக்கண்ணன் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டம் தொடர்பாக துணை தலைவர் இளங்கோ கூறுகையில், “மாநில அரசுக்கு எந்தவித நன்மையும் பயக்காத விதத்தில் அமித்ஷாவின் பயணம் அமைந்துள்ளது. இவரது பயணத்தால் மாநிலத்திற்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை மாநில வளர்ச்சிக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் அவர் புதுச்சேரிக்குள் நுழையக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியை ஏந்தியும் உருவபொம்மையை எரிக்க முயன்று போராட்டம் நடத்தினோம்” என்று குறிப்பிட்டார்.
போலீஸ் தரப்பில் கூறுகையில், சாரம் பகுதியில் கறுப்பு பலூன் விற்பனையார் ஒருவரையும், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 4 பேரையும் கைது செய்தோம். பலூன் விற்பனையாளரிடம் இருந்து கறுப்பு பலூன் பொட்டலம், இரண்டு சிலிண்டர்கள் பறிமுதல் செய்தோம்” என்றனர்.