புதுச்சேரி: புதுச்சேரி வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாரதி இல்லம் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அரவிந்தர் ஆசிரமம் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது வருகையால் நகரில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
புதுவைக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று வந்தார். சென்னை ஆவடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணன்குமார், சந்திர பிரியங்கா, எம்.பி. செல்வகணபதி மற்றும் பாஜக மாநில தலைவர் சாமிநாதன், எம்எல்ஏக்கள், பாஜக பிரமுகர்கள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து அளித்தும் வரவேற்றனர்.
விமான நிலைய வாசலில் பாஜக தொண்டர்கள் நுாற்றுக்கணக்கானவர்கள் உற்சாகத்தோடும், ஆரவாரத்தோடும் வரவேற்றனர். அமித்ஷாவுக்கு மலர்களை துாவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மத்திய அமைச்சர் கார் மூலம் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்துக்கு வந்து அவரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் அரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஆசிரம நிர்வாகிகள் வரவேற்றனர். அங்கு மகான் அரவிந்தர், அன்னை மீரா ஆகியோரின் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் மகான் அரவிந்தர், அன்னை ஆகியோரின் அறைகளை பார்வையிட்டார்.
புதுவைக்கு வந்த அமித்ஷாவை வரவேற்கும் விதமாக பிரம்மாண்ட அலங்கார வளைவுகள், கொடி, தோரணங்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மத்திய அமைச்சர் வருகையையொட்டி நகர் முழுவதும் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர் செல்லும் வழியெங்கும் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தர். புதுவை முழுவதும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.