சென்னை/புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பீகாருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு, நேற்று இரவு எல்லை பாதுகாப்பு படையின் தனி விமானத்தில் பீகாரில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அமித்ஷாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்எல்ஏ, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்டு ஆவடிக்கு சென்றார். வழிநெடுகிலும் தமிழக பாஜகவினர் மேளதாளங்கள் முழங்க அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அமித் ஷா வருகையையொட்டி மீனம்பாக்கம் முதல் ஆவடி வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வரவேற்பை ஏற்றுக்கொண்டு நேற்று இரவு ஆவடி மத்திய ரிசர்வ் படையினர் வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார். தொடர்ந்து, இன்று காலை ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்கிறார்.
புதுச்சேரி நிகழ்ச்சிகள்
புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு காலை 10 மணிக்கு வருகிறார். அவரை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் வரவேற்கின்றனர்.
தொடர்ந்து ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்துக்கு செல்கிறார். தொடர்ந்து 10.40-க்கு அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று அரவிந்தர், அன்னை சமாதிக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் 11 மணிக்கு புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.
மதியம் 2 மணிக்கு கம்பன் கலையரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். மேலும், புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி அருகே ரூ.70 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இந்தப் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். பின்னர் பிற்பகல் 3.45 மணிக்கு புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். 5 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார்.
அமித் ஷா வருகையையொட்டி புதுச்சேரி நகர் பகுதியில் பிரம்மாண்டமான அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. வழிநெடுகிலும் பாஜகவினரால் கொடி, பேனர், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. பாஜக சார்பில் 5 இடங்களில் அமித் ஷாவுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. சுமார் 800 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.