நெல்லையில் பெண் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கிய நபருக்கு விசாரணையின்போது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் கழிவறையில் வழுக்கி விழுந்ததில் காயம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பழவூர் பகுதியில் கோயில் திருவிழாவின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை பெண் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசா கத்தியால் தாக்கப்பட்டார். கழுத்து அறுபட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெண் உதவி ஆய்வாளரை தாக்கிய ஆறுமுகம் என்பவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியபோது மார்கரெட் தெரசா அபராதம் விதித்ததாகவும், அதனால் ஆத்திரத்தில் அவரது கழுத்தை அறுத்ததாகவும் ஆறுமுகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காவல்துறையினரின் விசாரணையில் இருந்த ஆறுமுகத்தின் கை எலும்பு முறிந்துள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்வதற்காக காவல்நிலையத்திலிருந்து அவரை காவலர்கள் அழைத்துச் சென்றனர். கழிவறையில் மறைத்து வைத்திருந்த கத்தியை அவர் எடுத்து வர முயன்றபோது வழுக்கி விழுந்ததாகவும், இதில் அவரது கை எலும்பு முறிந்ததோடு உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தாக்குதல் சம்பவம் குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, காவல்துறை பெண் ஆய்வாளரை திட்டமிட்டு கொல்ல முயன்றது ஏன் என விசாரணை நடைபெறுவதாகக் கூறினார்.
சமீபத்திய செய்தி: பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM