நேட்டோவில் இணைவதாக உக்ரைன் விருப்பம் தெரிவித்ததையடுத்து, ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவின்பேரில் கடந்த பிப்ரவரி 24-ல் ரஷ்யப் படைக்கும், உக்ரேனியப் படைக்கும் இடையே தொடங்கிய போரானது, இரண்டு மாதங்களாகியும் இன்னும் முடிவடையாமல் தொடர்கிறது. இரு நாடுகளுக்கிடையே பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், போரை நிறுத்துவதற்கான எந்தவொரு முடிவுகளும் இதுவரை எட்டப்படவில்லை. இந்த நிலையில், போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில், ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள மெட்ரோ நிலையத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய ஜெலன்ஸ்கி, “யார் இந்த போரினை தொடங்கியிருந்தாலும், அதனை நிச்சயம் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என நான் நம்புகிறேன். புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே நான் வலியுறுத்தி வந்தேன். ஆனால், நான் அவரைச்(புதின்) சந்திக்க விரும்பவில்லை, இருப்பினும் பேச்சுவார்த்தை முறையில் போரை முடிவுக்குக் கொண்டுவர புதினைச் சந்திக்க விரும்புகிறேன். எங்களின் நட்பு நாடுகளின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், ரஷ்யா மீது நம்பிக்கையில்லை” எனக் கூறினார்.
உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான மரியுபோல் நகரை, அண்மையில் ரஷ்யப் படை கைப்பற்றிவிட்டதாக, புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.