ஸ்ரீபெரும்புதூர்:
செங்காடு கிராமசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்க முன்மாதிரி கிராம விருது, உத்தமர் காந்தி விருது, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்பட கூடிய சிறந்த தொழில் மற்றும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு விருது என்ற பல்வேறு விருதுகளை அறிவித்து கொண்டிருக்கிறோம்.
மாநில அளவிலும் ஒன்றிய அளவிலும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த திட்டங்களை திறம்பட தேவைக்கேற்ப ஒருங்கிணைத்து கடைக்கோடி மக்களிடம் சேர்ப்பது, அது உள்ளாட்சி அமைப்புகளால் தான் முடியும்.
எனவே இன்றைய கிராம சபை கூட்டத்தில் உங்களிடம் கேள்விகளை கேட்ட போது அத்தனை பேரும் எழுந்து சொன்னீர்கள். இது இந்த கிராமத்தில் மட்டுமல்ல ஏறக்குறைய 10 வருட காலமாக ஒரு ஆட்சி இருந்தது. அந்த ஆட்சியில் முறையாக உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. நான் முறையாக தேர்தலை நடத்தி உள்ளோம். ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறோம்.
100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக்க கோரிக்கை வைத்தீர்கள். அதை மிக வேகமாக நிறைவேற்றித்தர காத்திருக்கிறோம். இதேபோல் இங்குள்ள மதுரை வீரன் குளம் புனரமைக்கப்படும். சாலை வசதி, மயானபாதை வசதி, கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்டு சாலைகளும் அமைக்கப்படும்.
இந்த பணிகள் நடந்து முடிந்ததா? என்று அடுத்தமுறை நேரடியாக வந்து பார்ப்பேன். இங்கு சொன்ன பொதுமக்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றப்படும்.