தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும், தேசிய ஊராட்சி தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக ஆண்டுக்கு 4 முறை நடத்தப்பட்டு வந்த கிராம சபைக் கூட்டமானது, இனி ஆண்டுக்கு 6 முறை நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில், இன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். கூட்டத்தில், கிராம மக்களிடம் கலந்துரையாடிய ஸ்டாலின், அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “ஒரு நாடு முழுமையாக வளர்ச்சியடைய வேண்டுமென்றால், முதலில் அதற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட திட்டம்தான், அனைத்து `கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்’. தற்போது இந்தத் திட்டத்தை மீண்டும் புதுப்பொலிவோடு நிறைவேற்றத் தொடங்கியுள்ளோம்.
வரும் நாள்களில், நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி நாளாக கடைபிடிக்கப்பட்டு, சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படவிருக்கின்றன. நீடித்த இலக்குகளை எட்டுவதன் மூலம், தேசிய அளவில் கிராம ஊராட்சிகள் முன்மாதிரியாக இருக்கும். குடிநீர் பிரச்னை, ரேஷன் கடை பிரச்னை, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வரக்கூடிய இடையூறுகள் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாள்களாக மாற்றித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட உங்களின் கோரிக்கைகளைச் சரிசெய்வதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். மத்திய மற்றும் மாநில அளவில் வகுக்கப்பட்டுள்ள திட்டங்களையெல்லாம், கடைக்கோடி மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதென்பது உள்ளாட்சி அமைப்புகளால் தான் முடியும். அனைத்து ஊராட்சிகளுமே எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் கூட, அந்தந்த ஊராட்சிகளுக்கு என்ன தேவையோ, எது அவசியமோ அவையனைத்தும் நிச்சயம் செய்து கொடுக்கப்படும்” எனக் கூறினார்.