சண்டிகர்: பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மியின் முதல்வர் பகவந்த் மான், தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போதைய அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அடிப்படையில் முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை அவர் திரும்ப பெற உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 184 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு நேற்று திரும்ப பெறப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்கள் சரண்ஜித் சிங் சன்னி, அமரீந்தர் சிங் மகன் ரணீந்தர் சிங், முன்னாள் எம்பி.யும் ஐபிஎல் தலைவருமான ராஜீவ் சுக்லா ஆகியோரின் பாதுகாப்பும் திரும்ப பெறப்படுகின்றது. ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்ற பிறகு 2வது முறையாக இதுபோல் முக்கிய தலைவர்களுக்கான பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த மார்ச் 11ம் தேதி 122 மாஜி.க்களின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.