கும்பகோணம்: தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதால் மின்வெட்டு பிரச்சினை விரைவில் சரியாகும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெருவில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவர் டிஆர்.லோகநாதன் தலைமை வகித்தார். மேயர் க. சரவணன் வரவேற்றார்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டிய பிறகு செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகம் உட்பட நாடு முழுதும் 8-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நிலக்கரி பற்றாக்குறையால்தான் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலக்கரி உற்பத்திக்கு ஏற்பாடு செய்யுமாறும், நிலக்கரி கையிருப்பை அதிகப்படுத்துமாறும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதை மத்திய அரசு காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
இப்போது ஏற்பட்டுள்ள மின் வெட்டுக்கு மிக முக்கிய காரணம் மத்திய தொகுப்பிலிருந்து நிலக்கரி வழங்காததுதான். மின்வெட்டைப் போக்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதால், இப்பிரச்சினை விரைவில் சரியாகும். மாநில உரிமைகளை மதிக்காத காரணத்தால்தான், பொதுமக்கள் திரண்டு ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை நடத்தி உள்ளனர் என்றார்.
நிகழ்ச்சியில், முன்னாள் மத்தியஅமைச்சர் கே.வி.தங்கபாலு, எம்பி செ.ராமலிங்கம், எம்எல்ஏக்கள் சாக்கோட்டை அன்பழகன், ராஜ்குமார், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின்பிரசாத் பங்கேற்றனர்.