ஜக்திஷ்பூர்,-பீஹாரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 75 ஆயிரம் பேர் ஒன்றாக சேர்ந்து, மூவர்ண கொடிகளை அசைத்து, உலக சாதனை படைத்துள்ளனர்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, போஜ்புர் மாவட்டத்தின் ஜக்திஷ்பூர் பகுதியில், முன்பு ஆட்சி புரிந்த வீர் குன்வர் சிங் மன்னரின், 164வது நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்ததன், 75வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
‘வந்தே மாதரம்’இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்குமார் சிங், நித்யானந்த் ராய், மாநில துணை முதல்வர்கள் தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட்டபோது, அங்கிருந்த 75 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள், மூவர்ண கொடிகளை கைகளில் ஏந்தி அசைத்தனர். அவர்களுடன், மேடையில் இருந்தவர்களும் தேசிய கொடிகளை ஐந்து நிமிடங்களுக்கு அசைத்தனர். இது, கின்னஸ் உலக சாதனையாக அறிவிக்கப்பட்டது.
இதில் மொத்தமாக, 77 ஆயிரத்து 700 பேர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், 2004ம் ஆண்டு பாகிஸ்தானில், 56 ஆயிரம் பேர் அந்நாட்டு தேசிய கொடிகளை ஏந்தி அசைத்தது, உலக சாதனையாக இருந்தது. தற்போது, அந்த சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.
இந்த விழாவில் பேசிய அமித் ஷா கூறியதாவது:இந்தியாவின், 100வது சுதந்திர தின விழா, 2047ம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. முதலிடம்அதற்குள், உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில், இந்தியாவை முதலிடத்தில் கொண்டு வர வேண்டும் என்பதே, பிரதமர் நரேந்திர மோடியின் ஒரே இலக்கு. அதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.