கர்நாடகாவில் 80 வயது மூதாட்டி ஒருவர், யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக, தான் யாசகம் செய்து சம்பாதித்த 1 லட்சம் ரூபாயை, மங்களூரு அருகே உள்ள பொளலி ராஜராஜேஸ்வரி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியிருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம் கஞ்சகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி அஸ்வத்தம்மா. நாடக கம்பெனி நடத்திவந்த இவரின் கணவர் 20 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்ட காரணத்தால், அஸ்வத்தம்மா வாழ்வதற்கே பெரும் நெருக்கடிக்குள்ளாகி யாசகம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். சுமார் 18 வருடங்களுக்கு மேலாக யாசகம் செய்துவரும் அஸ்வத்தம்மா, இதுபோன்று கோயில்களுக்கு நன்கொடையளிப்பது இது ஒன்றும் முதல்முறையல்ல.
அஸ்வத்தம்மா, கடந்த 18 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு கோயில்களுக்கு சுமார் 6 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரையில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அஸ்வத்தம்மா அன்னதானம் வழங்கியுள்ளார். இதுமட்டுமல்லாமல், உடுப்பி, தட்சிண கன்னடா போன்ற மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு, அஸ்வத்தம்மா நன்கொடைகள் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அஸ்வத்தம்மா, ``நான் இந்த உலகத்துக்கு வெறுங்கையுடன் தான் வந்தேன், திரும்பிச் செல்லும்போது எதையும் நான் எடுத்துச் செல்ல மாட்டேன். இந்த சமூகம் எனக்கு அளித்த பணத்தை இந்த சமூகத்துக்கே நான் திருப்பித் தர வேண்டும். யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதே என்னுடைய ஒரே பிரார்த்தனை” எனக் கூறினார்.
அஸ்வத்தம்மாவின் கொடை உள்ளம் குறித்து பேசிய கோயில் நிர்வாக அதிகாரியொருவர், தான் சொத்துக் குவிப்பதற்காக யாசகம் செய்து பணம் சம்பாதிக்கவில்லை என்பது அஸ்வத்தம்மாவின் நல்ல எண்ணம் என்று கூறினார்.