மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த, ‘யெஸ் பேங்க்’ நிறுவனர் ராணா கபூர், ‘தீவான் ஹவுசிங் பைனான்ஸ்’ நிறுவனர்கள் கபில் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகியோர், 5,000 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக, அமலாக்கத் துறை, தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சட்டச் சிக்கல் காரணமாக,வெளிநாட்டில் உள்ளஇவர்களது முதலீடுகளை பறிமுதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமை இடமாக வைத்து, யெஸ் பேங்க் செயல்படுகிறது. இதன் நிறுவனர் ராணா கபூர் முறைகேடாக கடன்களை வழங்கி, அதற்கு ஆதாயமாக தன் குடும்பத்தினர் நடத்தும் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் பெற்றதாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.இது தொடர்பாக ராணா கபூர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வாத்வான் சகோதரர்கள்
இதேபோல் தீவான் ஹவுசிங் பைனான்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த வாத்வான் சகோதரர்கள், முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த வழக்கு, யெஸ் பேங்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்நிலையில் அமலாக்கத் துறை, மும்பை தனி நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: ராணா கபூர் மற்றும் அவரது குடும்பத்தினர், தீவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனர்கள் கபில், தீரஜ் வாத்வான் ஆகியோர், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் வாயிலாக, 5,000 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதில் பெருந்தொகை வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்க சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
குறுகிய கால கடன்
கடந்த 2018 ஏப்., ஜூன் காலாண்டில் தீவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் கடன் பத்திரங்களை வெளியிட்டது. யெஸ் பேங்க், பொதுமக்களிடம் இருந்து திரட்டிய டிபாசிட்டில், 3,700 கோடி ரூபாய் மதிப்புக்கு, குறுகிய கால கடன் பத்திரங்களை வாங்கியது. இதையடுத்து தீவான் ஹவுசிங் நிறுவனம், ராணா கபூர் மற்றும் அவர் குடும்பத்தினருக்குச் சொந்தமான டி.ஓ.ஐ.டி., அர்பன்வெஞ்சர்ஸ் நிறுவனத்திற்கு, 600 கோடி ரூபாய் கடன்வழங்கியுள்ளது.
செயல்படாத இந்த நிறுவனத்திற்கு தரப்பட்ட கடனுக்கு, போதுமான பிணை பெறப்படவில்லை. அது மட்டுமின்றி, 40 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக காட்டி, அதன் மதிப்பை, 735 கோடி ரூபாயாக உயர்த்தி, கடன் பெற்றுள்ளனர். இந்த கடன் திரும்பத் தரப்படவில்லை. அதுபோல யெஸ் வங்கிக்கு தர வேண்டிய 3,700 கோடி ரூபாயை தீவான் ஹவுசிங் நிறுவனம் திரும்பத் தரவில்லை.இதனால் ராணா கபூர், அவரது குடும்பத்தினர் மற்றும் கபில், தீரஜ் வாத்வான் ஆகியோர், நில மதிப்பை போலியாக உயர்த்தி, கூட்டு சதி மூலம் பண மோசடி செய்துள்ளது நிரூபணமாகியுள்ளது.
இந்த வகையில் ராணா கபூர், அவரது குடும்பத்தினர், வாத்வான் சகோதரர்கள் ஆகியோர், 5,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளனர். குற்றச்செயல்கள் மூலம் கிடைத்த பணத்தில் வெளிநாடுகளில் பதுக்கிய சொத்துக்கள் குறித்து போதிய விபரங்கள் கிடைக்காததால் அவற்றை முடக்க முடியவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-
யெஸ் பேங்க் வரலாறு
ராணா கபூர், அசோக் கபூர் சகோதரர்களால் 2004ல் தோற்றுவிக்கப்பட்டது யெஸ் பேங்க். குறுகிய காலத்தில் மிகச் சிறப்பான வளர்ச்சியை அடைந்த இவ்வங்கிக்கு, 2017ல் சோதனைக் காலம் துவங்கியது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ், தீவான் ஹவுசிங் பைனான்ஸ், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு வழங்கிய பல ஆயிரம் கோடி ரூபாய், வாராக் கடனாக மாறியது. இதையடுத்து, வங்கி தலைவர் பதவியில் இருந்து ராணா கபூர் விலகினார். புதிய தலைவராக ரவ்நீதி கில் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் வங்கி நிர்வாகம் மோசமாக உள்ளதாக கூறி, 2020ல், அதன் இயக்குனர் பதவியில் இருந்து, பிரகாஷ் அகர்வால் உட்பட ஒவ்வொருவராக வெளியேறினர். இதையடுத்து யெஸ் பேங்க் நிர்வாகத்தை, ரிசர்வ் வங்கி கையகப்படுத்தியது. வங்கியை சீரமைக்க, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முன் வந்து முதலீடு செய்தது. யெஸ் பேங்க் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் பங்குகளை விற்பனை செய்ய மூன்று ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
மோசடி முதலீடு
கபில், தீரஜ் சகோதரர்களின் ‘பிலிப் ரியல்டர்ஸ்’ நிறுவனத்தின் மும்பை குடியிருப்பு திட்டத்திற்கு, யெஸ் பேங்க், 750 கோடி ரூபாய் கடன் வழங்கிஉள்ளது. இத்தொகை முழுதும் அந்த திட்டத்திற்கு செலவிடப்படாமல் வெளிநாடுகளில்சொத்துக்களை வாங்கவும், ரொக்கமாக டிபாசிட் செய்யவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.