#லைவ் அப்டேட்ஸ்: அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி இன்று உக்ரைன் பயணம்..!

கீவ், 
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 50வது நாளை தாண்டி தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைன் – ரஷியா இடையே நீடித்து வரும் போர் குறித்த முக்கிய செய்திகள் பின்வருமாறு:-
ஏப்ரல் 24,  12.00 P.M
ஐ.நா. பொதுச்செயலாளர் ரஷியா செல்வது நியாயம் கிடையாது – உக்ரைன் அதிபர் 
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 மாதங்கள் நிறைவடைகிறது. இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஐ.நா. சபை இறங்கி உள்ளது.அந்த வகையில், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், 26-ந் தேதி மாஸ்கோ செல்கிறார். அங்கு அவரை அதிபர் புதின் வரவேற்கிறார். அதைத்தொடர்ந்து அவர் அதிபர் புதினுடனும், வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடனும் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
அதைத்தொடர்ந்து அவர் உக்ரைன் சென்று அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியையும் சந்திக்கிறார். இந்த சந்திப்புகளின்போது, போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்துகிறார்.
இந்தநிலையில்,  ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ரஷியா  செல்வது எந்த நீதியும் இல்லை சரியான முறையுயும் கிடையாது என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். 
ஏப்ரல் 24,  11.00 A.M
ஒடேசாவில் இரண்டு ரஷிய ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன: உக்ரைன்
உக்ரைன் படைகள், தெற்கு நகரமான ஒடேசாவிற்கு அருகிலுள்ள துறைமுகத்தின் திசையில் பறந்து கொண்டிருந்த இரண்டு ரஷிய கப்பல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷியாவுக்கு பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கி உள்ளோம் – போலந்து 
ரஷிய போர் தொடுத்தலில் இருந்து உக்ரைனுக்கு $1.6 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை தனது நாடு வழங்கியுள்ளதாக போலந்து பிரதமர்  கூறுகிறார்.
ஏப்ரல் 24,  10.00 A.M
உக்ரைன் எல்லையில் அதிநவீன ஏவுகணைகளை குவித்த ரஷியா 
இஸ்கந்தர்-எம் லாஞ்சர்களை ரஷியா எல்லைக்கு அருகில் நிறுத்தியுள்ளதாக உக்ரைன் கூறுகிறது
உக்ரைன் இராணுவத்தின் கூற்றுப்படி, ரஷியா உக்ரைன் எல்லையில் இருந்து 60 கிலோமீட்டர் (40 மைல்) தொலைவில் 
இஸ்கந்தர்-எம் லாஞ்சர்கள் போர்க்கள ஏவுகணைகளை நிலைநிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் 24,  9.00 A.M
ரஷிய நடத்திய தாக்குதலில்  200க்கும் மேற்பட்ட  குழந்தைகள் பலி – உக்ரைன் 
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பில் 213 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 389 பேர் காயமடைந்துள்ளதாக  உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 24,  8.00 A.M
ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதல் – கொழுந்துவிட்டு எரிந்த குடியிருப்பு கட்டடம்
உக்ரைனின் கார்கீவ் நகர் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் குடியிருப்பு கட்டடம் தீப்பற்றி எரிந்தது. உக்ரைன் – ரஷியா போர் 60 நாட்களை எட்டிய நிலையில் உக்ரைனின் முக்கிய நகரமான கார்கீவ் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், அந்நகரில் உள்ள குடியிருப்பு கட்டடம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது. இதனை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்துள்ளனர். மேலும், கார்கீவ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 24,  7.00 A.M
ரஷியாவின் கொடூர தாக்குதல் : உருக்குலைந்து அலங்கோலமாக காட்சியளிக்கும் உக்ரைன்
உக்ரைனின் செர்னிஹிவ் பகுதியில் இருந்து ரஷிய படைகள் வெளியேறிய நிலையில் அப்பகுதி முற்றிலுமாக சிதிலமடைந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் பொருட்டு செர்னிஹிவ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரஷிய படைகள் வெளியேறி உள்ளன. இதன் பிறகு செர்னிஹிவ் நகரம் முற்றிலுமாக உருக்குலைந்து காட்சியளிக்கும் டிரோன் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், குடியிருப்பு கட்டடங்கள், கால்பந்து மையதானங்கள் உள்ளிட்டவை முற்றிலும் சிதிலமடைந்தும் சாலையெங்கும் குப்பைகள் நிறைந்தும் காணப்படுகின்றன.

ஏப்ரல் 24,  06.00 a.m
உக்ரைன் தனது அணுமின் நிலையங்களுக்கு பெரிய அளவிலான உபகரணங்களை விரும்புகிறது – ஐ.ஏ.இ.ஏ (IAEA)
ரஷியாவுடனான போரின் போது அணுமின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான “விரிவான உபகரணங்களின் பட்டியலை” உக்ரைன் சர்வதேச அணுசக்தி முகமையிடம் கேட்டுள்ளது என்று ஐ.ஏ.இ.ஏ ( IAEA) டைரக்டர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி தெரிவித்தார். இதில் கதிர்வீச்சு அளவீட்டு சாதனங்கள், பாதுகாப்பு பொருட்கள், கணினி தொடர்பானவை அடங்கும். மேலும் உதவி, மின் விநியோக அமைப்புகள் மற்றும் டீசல் ஜெனரேட்டர்களும் இடம்பெற்றிருக்கும் என்றும் அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 24,  05.44 a.m
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் ஆகியோர் இன்று (ஏப்ரல் 24-ம் தேதி) உக்ரைனுக்கு வருகின்றனர் என்று அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
ஏப்ரல் 24,  05.06 a.m
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் இன்று கீவ்வுக்கு வர உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 24,  04.19 a.m
உக்ரைனின் ஒடேசா மீது ரஷியா ஏழு ஏவுகணைகளை ஏவியது என்றும் அதில் இரண்டு இடைமறிக்கப்பட்டது என்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.  மேலும் உக்ரைனின் ஒடேசா மீது ரஷிய ஏவுகணை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 24,  03.38 a.m
இன்னும் சில வாரங்களில் ரஷிய எண்ணெய் மீது ஐரோப்பிய ஒன்றியம் முழுத் தடை விதிக்கும் என பிரான்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அந்நாட்டு பொருளாதார அமைச்சர் புரோனோ லீ மைரேயில் நேற்று தொலைக்காட்சியில் பேசுகையில், இன்னும் சில வாரங்களில் ரஷிய எண்ணெய் மீது ஐரோப்பிய ஒன்றியம் முழுத் தடை விதிக்கும் என்றும், இது ரஷியாவிற்குள் வெளிநாட்டு நாணயப் புழக்கத்தைத் தடுக்க உதவும் என்றும் அவர் கூறினார்.
ஏப்ரல் 24,  02.41 a.m
ரசாயன ஆயுதங்கள் மூலம் ஒடேசா மாகாணத்தை தாக்கும் மறைக்கப்பட்ட அச்சுறுத்தலாக ரஷிய அறிக்கைகள் விளக்கப்பட்டுள்ளன.
ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று, ஒடெசா ஒப்லாஸ்ட்டில் உள்ள யூஸ்னி துறைமுகத்தில் “ஆத்திரமூட்டலின்” ஒரு பகுதியாக அம்மோனியாவை ரசாயன ஆயுதமாக பயன்படுத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
ஏப்ரல் 24,  01.06 a.m
புதின் யதார்த்தத்துடன் தொடர்பை இழந்தால், அவர் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 24,  12.32 a.m
கார்கிவ் மாகாணத்தின் சுஹுயேவ் மற்றும் டெர்ஹாச்சியில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் – கவர்னர்
ரஷியாவின் குண்டுவீச்சு தாக்குதலின் விளைவாக பிராந்தியத்தில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆறு பேர் காயமடைந்தனர் என்று கார்கிவ் ஒப்லாஸ்ட் கவர்னர் ஓலே சினேஹுபோவ் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 24,  12.16 a.m
கருங்கடல் துறைமுக நகரில் அடுக்கு மாடி குடியிருப்பு மீது ரஷியா ஏவுகணை வீச்சு – 5 பேர் பலி
உக்ரைனில் உள்ள கருங்கடல் துறைமுக நகரான ஒடேசாவில் அடுக்கு மாடி குடியிருப்பு மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 5 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் தலைநகரை பிடிக்கும் முயற்சியில் வெற்றி பெற முடியாத நிலையில், தற்போது கிழக்கு உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடுத்து வருகிறது. டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகியவற்றை கொண்டுள்ள டான்பாஸ் பிராந்தியத்தை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட வேண்டும் என்ற கனவில் சீனா மெல்ல மெல்ல காய் நகர்த்தி வருகிறது.
இந்த டான்பாஸ் பிராந்தியத்துக்கும், ஏற்கனவே ஆக்கிரமித்து கையகப்படுத்திய கிரீமியாவுக்கும் இடையே ஒரு நிலப்பாதையை உருவாக்க ரஷியா விரும்புகிறது.
ஆனால் உக்ரைன் படைகளும் சளைக்கவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் படைகள் பலத்த எதிர்ப்பை காட்டி உள்ளன. 2 பிராந்தியங்களில் ரஷியாவின் 8 தாக்குதல்களை முறியடித்துள்ளன. ரஷியாவின் 9 டாங்கிகளையும், 18 கவச பிரிவுகளையும், 13 வாகனங்களையும், 3 பீரங்கி அமைப்புகளையும் அழித்துள்ளன.
போபஸ்னா நகரில் ரஷியா நடத்திய குண்டுவீச்சில் 2 பேர் கொல்லப்பட்டதாக லுஹான்ஸ்க் கவர்னர் செர்ஹி ஹைடாய் தெரிவித்தார்.
அதே நேரத்தில் ரஷியாவின் முயற்சிகளுக்கு உக்ரைன் படைகள் தொடர்ந்து பலத்த எதிர்ப்பை காட்டி வருவதால் கடந்த 24 மணி நேரத்தில் பெரிதான எந்த வெற்றியையும் ரஷியா அடையவில்லை என்று இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் தெரிவித்தது. மேலும், உக்ரைன் எதிர்ப்பால் ரஷியா வான் அல்லது கடல் கட்டுப்பாட்டை ஏற்படுத்தவில்லை,
கருங்கடல் துறைமுக நகரான ஒடேசா நகரில் உள்ள 14 தளங்களைக் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பின் மீது ரஷியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அந்த கட்டிடமும், அங்கே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் பலத்த சேதம் அடைந்தன.
உடனடியாக இங்கு தீயணைப்பு வண்டிகளும், மீட்பு படையினரும் விரைந்தனர். 5 ஆம்புலன்சுகளும் அங்கு விரைந்தன. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் உள்துறை மந்திரி ஆண்டன் ஹெரஷே்செங்கோ கடும் கண்டனம் தெரிவித்தார். ஏவுகணை தாக்குதலில் ஒருவரின் கார் தீப்பிடித்து அவர் கருகி உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் உதவியாளர் தெரிவித்தார். 18 பேர் படுகாயம் அடந்துள்ளனர்.
“மரியுபோலில் வெற்றி பெற்றதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தபோதிலும், அங்கு கடுமையான சண்டைகள் தொடர்ந்து நடக்கின்றன. நகரத்தை கைப்பற்றுவதற்கான ரஷிய முயற்சிகள் ஏமாற்றம் அளிக்கின்றன. இதனால் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷியாவின் முன்னேற்றம் வேகம் எடுக்கவில்லை”என்று இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் குறிப்பிட்டது.
இதற்கு நடுவே மரியுபோல் நகரில் இருந்து பெண்கள், குழந்தைகள், வயதானவர்களை வெளியேற்ற முந்தைய முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், நேற்று உக்ரைன் அதிகாரிகள் மீண்டும் முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகின.
அஜோவ் உருக்காலையில் பதுங்கு குழியில் பெண்களும், குழந்தைகளும் தங்கி இருப்பதைக் காட்டும் வீடியோவை அந்தப் பகுதி ராணுவம் வெளியிட்டுள்ளது. அறையில் நெருக்கமாக குழந்தைகளும், பெண்களும் காணப்படுகின்றனர். அதில் அவர்கள் உணவு மற்றும் தண்ணீரின்றி தவிப்பதாகவும், வெளியேற்றுமாறு கெஞ்சுவதையும் கேட்க முடிவதாக தெரியவந்துள்ளது.
டான்பாஸ் பிராந்தியத்தில் தாக்குதல்களை வலுப்படுத்துவதற்காக மரியுபோலில் இருந்து ஒரு டஜன் படைப்பிரிவுகளை ரஷியா நகர்த்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மரியுபோல் நகரில் இன்னும் ரஷியா வசம் வீழ்ந்து விடாத அஜோவ் உருக்காலை மீது இடைவிடாமல் குண்டு வீசப்படுவதாக அந்த நகர மேயர் ஆலோசகர் பெட்ரோ ஆண்ட்ரியுஷ்செங்கோ தெரிவித்தார்.
இதை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் உறுதி செய்துள்ளார். ஆனால் அந்த ஆலையை தகர்க்கும் நடவடிக்கையை ரத்து செய்வதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.
மரியுபோல் நகரில் மேலும் ஒரு ராட்சத புதைகுழியை காட்டும் செயற்கைக்கோள் படம் வெளியாகி உள்ளது.
ரஷிய அதிபர் மாளிகை ஆதரவாளர் பியோட்டர் அகோபோவ், “உக்ரைனில் ரஷியாவின் இலக்கு, அந்த நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைத்து, மீண்டும் மறுவடிமைப்பு செய்வதுதான். ராணுவ நடவடிக்கை நீண்ட காலம் செல்லும் என்பதை அனைவரும் புரிந்து கொள்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
கார்கிவ் பகுதியில் உக்ரைனின் ‘சு-25’ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும், மூன்று ‘எம்.ஐ.-8’ ஹெலிகாப்டர்களை அழித்ததாகவும் ரஷியா கூறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.