`காமத்துக்கு மரியாதை’ முதல் சீஸனில் காமம் தொடர்பான புரிந்துணர்வை ஏற்படுத்தியதோடு, அதில் எழக்கூடிய சந்தேகங்களுக்கும் தீர்வு வழங்கி வந்தார்கள் பாலியல் மருத்துவர்கள். தொடர் முடிந்த பிறகும் வாசகர்களின் கேள்விகள் வந்தவண்ணம் இருக்கவே, `காமத்துக்கு மரியாதை’ சீஸன் 2 ஆரம்பித்தோம். இதில், காமம் சார்ந்த பிரச்னைகள் மற்றும் இந்தக்கால தம்பதியர் சந்திக்கின்ற தாம்பத்திய சிக்கல்களுக்கான தீர்வுகள் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ். விந்து முந்துதல், சிறிய ஆணுறுப்பு ஆகிய இரண்டு பிரச்னைகளுக்கு அடுத்ததாக, பல ஆண் வாசகர்கள் தங்களுடைய பிரச்னையாகக் குறிப்பிடுவது `வளைந்த ஆணுறுப்பு’. இது இயல்பான ஒன்றா அல்லது ஏதேனும் பிரச்னையா? டாக்டர் காமராஜ் சொல்வதைக் கேட்போம்.
“ஆண்கள் பலரும் ஆணுறுப்பு 90 டிகிரியில் நேராக இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்படியிருக்க வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை. மேல் நோக்கி, கீழ் நோக்கி, வலது அல்லது இடது பக்கம் நோக்கி என லேசாக வளைந்துதான் இருக்கும் ஆணுறுப்பு. இந்த வளைவுகள் எல்லாம் இயல்பானவையே. ஆனால், ஆங்கில எழுத்து `எல்’ மாதிரியோ அல்லது `எஸ்’ மாதிரியோ வளைந்திருந்தால் அது `பைரோனி’ (Peyronie) என்கிற நோய். 1970-களில் வாழ்ந்த ஃபிரெஞ்சு மருத்துவர் பைரோனி, ஆணுறுப்பு வளைவு தொடர்பாக நிறைய ஆராய்ச்சிகள் செய்ததால், அவர் பெயராலேயே இந்த நோய் அழைக்கப்படுகிறது. இயல்பான வளைவா அல்லது பைரோனி நோயா என்பதை சில அறிகுறிகள் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம்” என்றவர், அவைபற்றி விளக்க ஆரம்பித்தார்.
“வளைந்த ஆணுறுப்பைக் கொண்டவர்கள், தங்கள் உறுப்பைத் தொட்டுப்பார்த்தால் உள்ளே கட்டிபோல இருப்பதை உணர்வார்கள். இந்தக் கட்டியை மருத்துவர்கள் `ஃபைப்ரோசிஸ்’ (fibrosis) என்று சொல்வோம். ஆணுறுப்பு இப்படி வளைந்திருப்பதால் அதன் நீளம் குறைவாக இருக்கும். விறைப்புத்தன்மை அடையும்போது சுரீரென்று வலிக்கும். விறைப்புத்தன்மை வருவதிலும் பிரச்னை இருக்குமென்பதால் ஆண்மைக்குறைபாடும் ஏற்படலாம். இதுவே பிரச்னையில்லாத வளைவு என்றால், ஆணுறுப்பினுள்ளே கட்டி எதுவும் இருக்காது.
பைரோனியை முற்றிலும் சரிசெய்ய முடியும். அறுவை சிகிச்சை செய்து கட்டியை நீக்குவது முதல் தீர்வு. அந்தக் கட்டியின் மீது ஊசி வழியாக 12 தடவை, அதற்கான கால இடைவெளியுடன் மருந்தைச் செலுத்துவதன் மூலம் கட்டியைக் கரைக்கலாம். இந்திய ரூபாய் மதிப்பில் இந்த 12 ஊசிகளுக்கு 3.50 .லட்சம் வரை செலவாகும். இது இரண்டாவது வகை தீர்வு. மூன்றாவதாக, அந்தக் கட்டியை அதற்கென்று இருக்கிற கருவி மூலம் கரைத்து விடலாம்.
ஆணுறுப்பு லேசாகத்தான் வளைந்திருக்கிறது என்றால், உள்ளாடை அணியும்போது ஆணுறுப்பு எந்தப் பக்கம் வளைந்திருக்கிறதோ அதற்கு எதிர்ப்பக்கமாக ஆணுறுப்பை ஒதுக்கி வைத்து உள்ளாடை அணிய வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்துவந்தால் கொஞ்ச காலத்தில் அந்த வளைவு சரியாவதற்கான வாய்ப்பிருக்கிறது.
ஆணுறுப்பில் வளைவு கொண்டவர்கள் அத்தனை பேரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ரொம்பவும் வளைந்திருக்கிறது; வலியிருக்கிறது; தாம்பத்திய உறவுகொள்ள முடியவில்லை என்றால் மட்டும் மருத்துவரைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்” என்று முடித்தார் டாக்டர் காமராஜ்.
தொடர்ந்து மரியாதை செய்வோம்!