சென்னை: வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நிர்வாகப் பிரிவுக்கான 9 மாடிகள் கொண்ட கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, நாமக்கல், சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் திறப்பு விழா, நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் திறப்பு விழா, வணிக வழக்குகளுக்கான நீதிமன்ற திறப்பு விழா, கரோனா காலகட்டத்தில் உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு சேமநல நிதி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
புதிய கட்டிடங்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா திறந்துவைத்தார். வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு சேமநல நிதியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
விழாவுக்கு தலைமை வகித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அவருக்கு வாழ்த்துகள். நான் முதல்வராகப் பொறுப்பேற்று அடுத்த மாதம் 7-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, உயர் நீதிமன்றத்தில் நான் பங்கேற்கும் முதல் விழா என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சட்டத்தின் குரலாக மட்டுமின்றி, இந்திய மக்களின் மனசாட்சியாகவும், குரலாகவும் செயலாற்றி வருகிறார்.
நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம் ஆகியவை மக்களின் உணர்வுகள், விருப்பங்களை பிரதிபலிக்கும் மன்றங்களாக செயல்பட வேண்டும். அனைத்து சட்டங்களும், நீதிமுறை சார்ந்த லட்சியங்களால் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தலைமை நீதிபதி இவ்விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாகரிக சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கும், மறுமலர்ச்சிக்கும், மக்களின் பாதுகாப்புக்கும் சுதந்திரமாக செயல்படும் நீதித்துறை அவசியம் என்பதை அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்கிறது. அதன்படி, மக்களுக்கு விரைவான நீதி கிடைக்க அனைத்து வசதிகளையும் தமிழக அரசு முன்னுரிமை அடிப்படையில் செய்துவருகிறது.
வாடகை கட்டிடங்களில் இயங்கும் நீதிமன்றங்கள் படிப்படியாக சொந்தக் கட்டிடங்களுக்கு மாற்றப்படும். காரைக்குடியில் புதிய சட்டக்கல்லூரி தொடங்கப்படும்.
வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல,கரோனாவால் இறந்த 450 வழக்கறிஞர்களின் குடும்பத்துக்கான ரூ.20 கோடி நிதியை தமிழக அரசு விரைவில் வழங்கும்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் 9 மாடிகள் கொண்ட கட்டிடம் கட்ட ரூ.20.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நீதித் துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யும் வகையில் 4.24 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.
நீதித் துறை முழுமையாக வீற்றிருக்கும் இங்கு தமிழக அரசு சார்பில் சில கோரிக்கைகளை முன்வைக்கிறேன். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை கருத்தில் கொள்ள வேண்டும். சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும்.
ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றங்களில், அந்தந்த மாநில மொழிகள் அலுவல் மொழியாக உள்ளதுபோல, சென்னை உயர் நீதிமன்றத்திலும் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
முன்னதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற முதல்வர் ஸ்டாலின், உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஜெயரஞ்சன் எழுதிய ‘திராவிடன் ஜர்னி’ என்ற புத்தகத்தை அவருக்கு பரிசாக வழங்கினார். அதேபோல, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, திருப்பதி வெங்கடாசலபதி படத்தை வழங்கினார். தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் சார்பிலும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.