புதுடில்லி,-‘இந்திய மருந்துகள் கட்டுப்பாடு ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும், 6 – 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு, ‘கோவாக்சின்’ தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கப்படும்’ என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நம் நாட்டில், ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.இதேபோல், 15 – 18 வயதுக்கு உட்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசியும், 12 – 14 வயதுக்கு உட்பட்டோருக்கு, ‘பயாலஜிக்கல் – இ’ நிறுவனத்தின் ‘கோர்பேவாக்ஸ்’ தடுப்பூசியும் செலுத்தப்படுகின்றன.
இதற்கிடையே, 2 – 18 வயதுக்கு உட்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்த அனுமதி கோரி, பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த ஆண்டு விண்ணப்பித்தது.தரவுகளை ஆய்வு செய்து, டி.சி.ஜி.ஐ., எனப்படும், இந்திய மருந்துகள் கட்டுப்பாடு ஆணையத்திடம், சி.டி.எஸ்.சி.ஓ., எனப்படும் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்கள் குழு, தடுப்பூசியை பரிந்துரைத்தது. இந்நிலையில், 6 – 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கும், கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கக்கோரி, டி.சி.ஜி.ஐ.,யிடம், சி.டி.எஸ்.சி.ஓ.,வின் நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதேபோல், கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை, 5 – 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு செலுத்த அனுமதி வழங்கவும், டி.சி.ஜி.ஐ.,யிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும், டி.சி.ஜி.ஐ., ஒப்புதல் அளித்தவுடன், சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒருவரால் 2 பேருக்கு பாதிப்பு
டில்லியில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. இதில், டில்லியில் கொரோனாவால் பாதிக்கப்படும் ஒரு நபர், தன்னைத் தவிர மேலும் இரண்டு பேருக்கு பாதிப்பு ஏற்பட காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.