புதுடெல்லி: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பளம், வெல்லம், சாக்லெட் உள்ளிட்ட 143 அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை கொண்டு வரும் வகையில் கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. இதில் 5%, 12%, 18%, 28% என 4 பிரிவுகளில் வரி வசூலிக்கப்படுகிறது. தங்கத்துக்கு மட்டும் 3% என்ற தனி பிரிவு உள்ளது. உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்குப் பிறகு பொருளாதார மீண்டுள்ள நிலையில், ஜிஎஸ்டியில் வசூல் சாதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ரூ.1.42 லட்சம் கோடி வரி வசூலானது. ஆனால், இதன் பெரும்பாலான பலனை ஒன்றிய அரசு மட்டுமே அனுபவிக்கிறது. மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய பல கோடி ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை வழங்காமல் உள்ளது.இந்நிலையில், ஜிஎஸ்டி வரி விகிதத்தை உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. ஜிஎஸ்டி வரிவிகிதத்தில் சுமார் 1,300 பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இதில், 143 அத்தியாவசிய பொருட்களின் வரி அதிகரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அப்பளம், சாக்லெட், வெல்லம், கலர் டிவி என அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் பொருட்களின் வரி விகிதங்கள் உயர்த்தப்பட உள்ளன. அதாவது, 143 பொருட்களில் 92 சதவீத பொருட்கள், 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீத வரி பிரிவுக்கு மாற்றப்பட இருக்கிறது. தற்போது, சொகுசு பயன்பாட்டு பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரிப்பிரிவுக்குள் உள்ளன.அப்பளம், வெல்லம் போன்ற உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவைகள் 5 சதவீத வரம்புக்குள் கொண்டு வரப்பட உள்ளன. தோல் ஆடைகள் மற்றும் அணிகலன்கள், ஷேவிங் ரேசர்கள், கைக்கடிகாரங்கள், ஆப்டர் ஷேவ் திரவியங்கள், வாசனை திரவியங்கள், பல் துலக்கும் திரவங்கள், வேபில்ஸ், சாக்லேட்டுகள், கோகோ பவுடர், சாறுகள் மற்றும் காபி, கைப்பைகள், ஷாப்பிங் பைகள், மது அல்லாத பானங்கள், செராமிக் ஷிங்குகள், வாஷ்பேசின்கள், பிளைவுட், கதவுகள், ஜன்னல்கள், மின் சாதனங்கள் (சுவிட்சுகள், சாக்கெட்டுகள் போன்றவை) உள்ளிட்ட 125 பொருட்கள் ஜிஎஸ்டி வரியில் 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.வால்நட்கள் 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், கஸ்டர்ட் பவுடர் 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் டேபிள், சமையலறை மரச்சாமான்கள் 12ல் இருந்து 18 சதவீதமாகவும் வரி உயர்த்தப்பட உள்ளன. இவற்றில் பெரும்பாலான பொருட்கள் கடந்த 2017ம் ஆண்டு முதல் படிப்படியாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டவை. தற்போது இவற்றின் வரி மீண்டும் கிட்டத்தட்ட 10 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது. இதன் காரணமாக இவற்றின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது. இதில், இந்த வரி உயர்வு குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிந்த கையோடு, பெட்ரோல், டீசல், காஸ் விலையை ஒன்றிய அரசு உயர்த்தியது. இதனால், ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐ தாண்டியதோடு, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து, சாமானிய மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். தற்போது அவர்களுக்கு அடுத்த அடியாக ஜிஎஸ்டி வரியையும் உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த 143 பொருட்களின் வரியை உயர்த்துவது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளிடம் ஜிஎஸ்டி கவுன்சில் கருத்து கேட்டிருப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் அப்படி கேட்கப்படவில்லை என ஒன்றிய அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றங்களை செய்ய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் மாநில அமைச்சர்கள் கொண்ட குழு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது. அந்த குழு, வரி மாற்றம் தொடர்பாக இதுவரை எந்த அறிக்கையையும் சமர்பிக்கவில்லை என தெரிகிறது.* காங்கிரஸ் கண்டனம்காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், ‘‘143 அத்தியாவசியப் பொருட்களின் ஜிஎஸ்டி வரியை அதிகபட்ச வரம்புக்குள் மாற்றுவதில் எந்த தர்க்கமும், நியாயமும் இருப்பதாக தெரியவில்லை. ஏற்கனவே, பணவீக்கத்தில் மக்களை சிரமப்படுத்தும் நீங்கள், இப்போது ஜிஎஸ்டி வரியை உயர்த்தி மேலும் கஷ்டப்பட செய்யப் போகிறீர்கள். இதனால் எல்லாவற்றிலும் புறக்கணிக்கப்படும் நடுத்தர வர்க்க மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இந்த அரசாங்கம் துரோகமானது, தந்திரமானது மற்றும் பயங்கரமானது. பாஜ அரசின் இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்,’’ என்றார்.