வேலூரை தொடர்ந்து ஆந்திராவிலும் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து வாலிபர் பலி

வேலூர்:

வேலூரில் வீட்டுக்குள் வைத்து எலக்ட்ரிக் பைக் பேட்டரிக்கு சார்ஜ் போட்டபோது பைக் வெடித்து சிதறியது. இதில் தந்தை, மகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவம் நடந்த 1 மாதத்திற்குள் மேலும் 2 இடங்களில் எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் அந்த சம்பவங்களில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் ஆந்திராவில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளார். அவரது மனைவி, 2 மகள்கள் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம், விஜய சூர்யராவ்பேட்டை குலாபிபேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது35), டி.டி.பி. ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஆர்த்தி(30), மகள்கள் பிந்து (10), சசி(6). சிவக்குமார் நேற்று முன்தினம் புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்திற்கு வாங்கினார்.

இரவு தனது வீட்டின் படுக்கை அறையில் சார்ஜ் செய்வதற்காக ஸ்கூட்டரில் இருந்து பேட்டரியை தனியாக எடுத்து சென்று சார்ஜ் போட்டு வைத்துவிட்டு குடும்பத்துடன் தூங்கினார்.

அதிகாலை 3 மணியளவில் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. வீட்டில் உள்ள மின்சார ஒயர்களும் தீப்பிடித்து அறையில் இருந்து புகை வெளியேறியது.

இதில் தீக்காயமடைந்த சிவக்குமார் குடும்பத்தினர் அலறியடித்து எழுந்தனர். வீட்டில் இருந்து வெளியேற வழியில்லாமல், அவர்கள் சமையல் அறைக்கு ஓடிச்சென்று அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று படுகாயமடைந்த சிவக்குமார் மற்றும் குடும்பத்தினரை மீட்டனர்.

இதுகுறித்து போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சிவக்குமார் பரிதாபமாக இறந்தார்.

அவரது மனைவி ஆர்த்தி. மகள்கள் பிந்துஸ்ரீ, சசி ஆகிய 3 பேரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆர்த்தி அபாய கட்டத்தில் உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எலக்ட்ரிக் பைக் பேட்டரிகள் தொடர்ந்து தீப்பிடித்து எரிவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.