திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் பக்தர்களுக்கான மருத்துவ முதலுதவி மையம் இன்று (ஏப்.24) திறக்கப்பட்டது.
தமிழகத்தில் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ள 10 கோயில்களில் மருத்துவ முதலுதவி மையம் அமைக்கப்படும் என்று கடந்தாண்டு செப்.4-ம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, கடந்தாண்டு டிச.31-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொளிக் காட்சி மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி முருகன் கோயில், பழனி பாலதண்டாயுதபாணி கோயில் உட்பட 7 கோயில்களில் மருத்துவ முதலுதவி மையங்களைத் திறந்துவைத்தார்.
இந்தநிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில், உள் மணல்வெளி சந்திரபுஸ்கரணி தீர்த்த குளம் அருகில் பக்தர்களுக்கான மருத்துவ முதலுதவி மையம் இன்று திறக்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த ராகவேந்திரன் என்பவரின் ரூ.7 லட்சம் நன்கொடையால் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ முதலுதவி மையம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள், பல்நோக்கு பணியாளர்கள் என தலா 2 பேர் இங்கு பணியாற்றவுள்ளனர். இந்த மருத்துவ முதலுதவி மையத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்து, மருத்துவர்கள் உட்பட 6 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, சட்டப்பேரவை ஸ்ரீரங்கம் தொகுதி உறுப்பினர் எம்.பழனியாண்டி, இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் எஸ்.செல்வராஜ், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.வைரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் 2022, மார்ச் 13-ம் தேதி மருத்துவ முதலுதவி மையம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.