Cardamom sharbat helps to reduce summer heat: கோடைக்காலம் வந்துவிட்டாலே எல்லாரும் வெயிலை சமாளிக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்கிறோம். அதிக தண்ணீர் அருந்துவது, குளிர்ச்சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது என ஓவ்வொருவரும் பல்வேறு வழிகளை பின்பற்றி வருகின்றனர். வெளியில் வேலை பார்ப்பவர்கள் அல்லது அடிக்கடி வெளியில் செல்பவர்கள், கடைகளில் ஜூஸ், இளநீர், வெள்ளரிக்காய் என ஏதோ ஒன்றின் மூலம் தங்கள் தாகத்தையும் கோடையின் தாக்கத்தையும் சமாளித்துக் கொள்கின்றனர்.
ஆனால், வீட்டில் உள்ளவர்கள், வீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள், பள்ளி குழந்தைகளுக்கு இது சற்று சிரமமான விஷயம். ஆனால் இதற்கு எளிய தீர்வு உண்டு. வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிமையான சர்பத் செய்வதன் மூலம் நீங்கள் இந்தக் கோடையை சமாளிக்கலாம். ஆமாம் சில ஏலக்காய்கள் போதும் உங்கள் கோடை வறட்சி தீர்ந்துபோகும். ஏலக்காய் கொண்டு சர்பத் தயாரிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
ஏலக்காய் இல்லாமல் சமையலறையில் உள்ள மசாலாப் பொருட்கள் முழுமையடையாது. ஏலக்காய் இனிப்புகள் முதல் காய்கறிகள் மற்றும் அசைவ உணவுகள் வரை பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காய் தேநீர் இந்தியா முழுவதும் பிரபலமானது.
அதேநேரம், ஏலக்காய் சர்பத் கோடையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது பாக்டீரியா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் நமது கல்லீரலைப் பாதுகாக்கிறது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. மேலும், இது உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.
ஏலக்காய் சர்பத்தை வீட்டில் செய்வது மிகவும் எளிது. இந்த ஆரோக்கியமான பானத்தை உருவாக்க உங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் வழிமுறைகள் இங்கே.
தேவையான பொருட்கள்
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
உப்பு – 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைத் துண்டுகள் – 2
இதையும் படியுங்கள்: இளநீர் முதல் எலுமிச்சை ஜூஸ் வரை… கோடையில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!
சர்க்கரை – சுவைக்கு ஏற்ப
ஐஸ் க்யூப்ஸ் – 8-10
தண்ணீர் – 4 கப்
செய்முறை
முதலில் ஏலக்காயை எடுத்து தோல் நீக்கி நன்கு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
இதற்குப் பிறகு ஒரு ஆழமான பாத்திரத்தை எடுத்து அதில் 4 கப் தண்ணீரை ஊற்றவும்.
சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து, கரண்டியால் நன்கு கலக்கவும்.
இதற்குப் பிறகு, சர்க்கரை நீரில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் ஏலக்காய் தூள் கலந்து கரைக்கவும்.
இப்போது இந்தக் கலவையில் சில ஐஸ் கட்டிகளை சேர்த்து 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.
இதற்குப் பிறகு, ஒரு கிளாஸில் சர்பத்தை ஊற்றி 2-3 ஐஸ் க்யூப்ஸ் சேர்க்கவும். எலுமிச்சை துண்டுகளுடன் சர்பத்தைப் பருகவும்.