எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரிவது அடிக்கடி நிகழும் ஒன்றாகிவிட்டது. இந்த வாகனங்களினால் உயிரிழப்பு மற்றும் காயங்கள் என பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எலெக்ட்ரிக் வாகனங்களைப் பரிசோதிக்க வல்லுநர் குழு ஒன்றை அமைக்கவிருப்பதாக அறிக்கை வெளியிட்டார். அந்தக் குழுவின் முதல் கட்ட விசாரணைகள் தொடங்கியிருக்கும் நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களில் விதி மீறல்கள் ஏதும் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் சந்தையில் களமிறங்கிய Ola electric நிறுவனத்தின் வாகனங்களும் தீப்பிடிக்கத் தொடங்கின. இதற்கான காரணம் குறித்த தொடக்க நிலை சோதனையை மார்ச் 26 முதல் புனேவில் நடத்தி வருகிறது Ola நிறுவனம். இந்நிலையில் தாங்கள் விற்பனை செய்த 1441 வாகனங்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாக நிறுவனம் அறிவித்துள்ளது. “குறிப்பிட்ட பேட்சில் தயாரிக்கப்பட்ட 1441 வாகனங்களையும் திரும்பப் பெற்று முழுமையான பரிசோதனையை செய்ய இருக்கிறோம். பேட்டரி செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த சோதனைகளை எங்களின் பொறியாளர்கள் மேற்கொள்ள இருக்கின்றனர்” என்று Ola நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. ஏற்கெனவே இந்தியாவின் தர குறியீடான AIS 156-ன் படி சோதித்து விட்டோம். கூடுதலாக ஐரோப்பிய பாதுகாப்பு குறியீடான ECE 136-ன் படி தரத்தை சோதிக்க இருப்பதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களான Okinawa Autotech நிறுவனம் 3000 யூனிட்டுகளையும் PureEV நிறுவனம் 2000 யூனிட்டுகளையும் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளனர். குறைகள் நீக்கப்பட்டு தரமான எலெக்ட்ரிக் வாகனங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.