புதுடில்லி: மின்சார வாகனங்கள் தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், 1,441 மின்சார ‘ஸ்கூட்டர்’களை திரும்பப் பெறுவதாக, ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம் அறிவித்துள்ளது.
காற்று மாசை குறைக்கும் வகையில், மின்சார வாகனங்கள் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகின்றது. பல்வேறு நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மின்சார வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரியும் சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன. இதனால் மின்சார வாகனங்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது.
இந்தப் பிரச்னை தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு சமீபத்தில் நிபுணர் குழுவை அமைத்துள்ளது.மேலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.அதன்படி, ‘ஒகினாவா, பியூர்’ ஆகிய நிறுவனங்கள் தங்களின் சில வாகனங்களை திரும்பப் பெற்று உள்ளன. அந்த வரிசையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனமும் இணைந்துள்ளது.
சமீபத்தில் புனேயில் இந்த நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, தீப்பற்றி எரிந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்ட நேரத்தில் தயாரான 1,441 வாகனங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த வாகனங்கள் முழு பரிசோதனை செய்யப்படும் என, நிறுவனம் கூறி உள்ளது.
மற்றொரு பலி
மின்சார வாகனங்கள் வெடித்து தீப்பற்றி எரிந்த சம்பவங்களில் சில உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் விஜயவாடாவைச் சேர்ந்த, சுயதொழில் செய்து வந்த சிவக்குமார், 40, சமீபத்தில் புதிய மின்சார ஸ்கூட்டரை வாங்கினார். தன் வீட்டில் அதற்கு, ‘சார்ஜ்’ செய்தார்.
துாக்கத்தில் இருந்தபோது, நேற்று முன்தினம் அதிகாலையில், அந்த வாகனம் திடீரென வெடித்து சிதறி தீப்பற்றியது. பலத்த காயமடைந்த சிவக்குமார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மனைவி பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
Advertisement