வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில், மேசைகளை மாணவர்கள் அடித்து உடைப்பது போன்ற வீடியோ வெளியான சம்பவத்தில் தொடர்புடைய 12 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தொரப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் பள்ளிநேரம் முடிந்தபின்பும் வீட்டிற்கு செல்லாமல் வகுப்பறையில் உள்ள இரும்பு மேசைகளை உடைத்தெறிந்துள்ளனர்.
ஆசிரியர்கள் கண்டித்தும் மாணவர்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து மேசைகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், வேலூர் ஆர்டிஓ, வட்டாட்சியர், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று ஆய்வு செய்து மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, ஃபேர்வெல் பார்ட்டி நடத்த அனுமதி தராததால் மேசையை நாற்காலிகளை உடைத்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.