“அனுமன் மந்திரத்தை உச்சரிப்பது தேசத்துரோகமா?” என்று மகாராஷ்ட்ரா எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவீஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதி சுயேச்சை எம்.பி.யான நவ்னீத் கவுர் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், “இந்துத்துவா கொள்கையை பேசி முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கும் உத்தவ் தாக்கரே தற்போது அந்தக் கொள்கையை மறந்துவிட்டார். அதனை அவருக்கு நினைவுப்படுத்த அனுமன் மந்திரத்தை அவர் வீட்டு வாசலில் ஒலிக்கவிடப் போகிறேன்” எனக் கூறியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆளும் சிவசேனா தொண்டர்கள் நவ்னீத் கவுரின் வீட்டை நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர். மேலும், அவரது வீட்டின் மீது கல்வீச்சிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக நவ்னீத் கவுரையும், அவரது கணவரும் எம்எல்ஏவுமான ரவி ராணாவையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, சிறைச்சாலையில் நவ்னீத் கவுர் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், முறையற்ற வகையில் போலீஸார் அவரை நடத்துவதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்ட்ரா எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னவீஸ் கூறுகையில், “அனுமன் மந்திரத்தை உச்சரிப்பேன் என கூறியதற்காக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அனுமன் மந்திரத்தை நாம் தினசரி உச்சரிக்கிறோம். அதனால் நாம் அனைவரும் தேசத்துரோகிகளா? சிறையில் ஒரு பெண் கொடுமைகளை அனுபவித்து வருகிறார். அவருக்கு தண்ணீர் தர போலீஸார் மறுக்கிறார்கள். கழிவறைக்கு செல்ல அவரை அனுமதிப்பதில்லை. முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர் என்பதையே இது காட்டுகிறது” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM